×

நீட் ஆள்மாறாட்டத்திற்கு உதவிய கேரள இடைத்தரகர் கைது : உதித்சூர்யா உட்பட 5 பேர் ஆள்மாறாட்டம் செய்ததாக வாக்குமூலம்


சென்னை : சென்னை மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் மூலம் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர உதவிய கேரள இடைத் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்ததையும் இடைத் தரகர் ஒப்புக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய மாணவர் உதித்சூர்யாவுக்கு உதவியவர்களை பிடிக்க கேரள சென்றுள்ள தமிழக சிபிசிஐடி தனிப்படை போலீசார் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நீட் பயிற்சி மையத்தில் சோதனை உள்ளனர். ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத உதவிய இடைத் தரகர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உதித் சூரியா உள்பட 6 பேருக்காக வேறு நபர்களை தேர்வு எழுத வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக  ஒவ்வொருவரிடமும் தலா 20 லட்சம் ரூபாய் பெற்று ஆள்மாறாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய 6 பேரில் 4 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் உதித் சூர்யாவை தவிர எஞ்சிய 3 பேர் யார் என்பதை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே நீட் தேர்வு ஆள்மாறாட்டம் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள உதித் சூர்யாவின் தந்தையான மருத்துவர் வெங்கடேஷ் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆள்மாறாட்டத்திற்கு அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் உதவினார்களா என்பதை கண்டறிய வெங்கடேஷ் மற்றும் உதித் சூர்யா ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது நீட் ஆள்மாறாட்டம் பற்றி மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : intermediary ,Kerala ,arrest , Impersonation, Udithsurya, Intermediary, Arrest, Confession
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...