×

பைக் ஓட்டியவருக்கு சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்

* அரிமளம் அருகே விநோதம்

திருமயம் : அரிமளம் அருகே வாகன சோதனையின் போது புல்லட்டில் வந்த நபருக்குசீட் பெல்ட் அணியவில்லை என போலீசார் ரசீது கொடுத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் பைக் ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அவ்வப்போது தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் கோர்ட் உத்தரவு, சாலை விதிகளை மதிக்காமல் வருவதால் ஒருசில போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதுடன் விட்டுவிடும் நிலையில் ஒருசிலர் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கும் விதமாக வாகன ஓட்டிகள் செய்த தவறை குறிப்பிட்டு ரசீது வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள வடக்கு மேற்பனைக்காட்டை சேர்ந்தராஜபிரபு கடந்த 21ம் தேதி தனது குடும்பத்தினருடன் தனது புல்லட் பைக்கில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி சென்றுவிட்டு வீடு திருப்பிகொண்டிருந்தார். அப்போது அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி பகுதியில் வந்தபோது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ ஒருவர் ராஜபிரபு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளார்.

அப்போது ராஜபிரபு ஹெட்மெட் அணியாததால் அபராதம் விதிப்பதாக கூறி போலீசார் ராஜபிரபுவிடம் ரசீது ஒன்றை கொடுத்து ரூ.100 பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற ராஜபிரபு கடந்த 25ம் தேதி போலீசார் கொடுத்த ரசீதை பார்த்துள்ளார். அதில் சீட் பெல்ட் அணியாததற்கு அபராதம் விதிப்பதாக எழுதப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து புல்லட்டுக்கு சீட்பெல்ட் அணிவில்லை என போலீஸ் கொடுத்த ரசீதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாக புதுக்கோட்டை பகுதியில் பரவி வருகிறது.

Tags : bike driver ,Bike Rider ,Thirumayam , Thirumayam,Bike Rider, fine, seat belt
× RELATED சாலையில் சென்ற மாடு மீது பைக் மோதி மருந்து விற்பனையாளர் பலி