×

கருவேலம் மண்டி கிடக்கிறது காரியாபட்டி தெற்காறு தூர்வாரப்படுமா?

காரியாபட்டி : தண்ணீர் சேமிக்கும் வகையில் காரியாபட்டி தெற்காறை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  காரியாபட்டி தெற்காறு தண்ணீரால் காரியாபட்டி, தோப்பூர், சித்துமூன்றடைப்பு, அல்லிக்குளம், ஆத்திகுளம், கிழவனேரி, புதுப்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைகின்றன. இந்த தண்ணீர் மண்டலமாணிக்கம் சென்று கமுதி வழியாக கடலில் கலக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தெற்காறு கருவேலம் மண்டி கிடக்கிறது. எனவே தெற்காற்றை தூர்வாரவும், தோப்பூரில் தடுப்பணை கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோப்பூர் மணிகண்டன் கூறுகையில், ‘‘தோப்பூர் கண்மாய் மூலம் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறும்.  இந்த கண்மாய்க்கு தெற்காற்றின் வழியாக கால்வாய் மூலம் தண்ணீர் வரும். கடந்த இருபது ஆண்டுகளாக வரத்து கால்வாய் தூர்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் பேரூராட்சி நிர்வாகம் வரத்துக்கால்வாயை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் சிறிது மழை பெய்தாலும் கால்வாய் வழி தண்ணீர் வருவதில்லை. எனவே விவசாய மக்களின் நலனுக்காகவும், குடிநீர் ஆதாரத்திற்காகவும் வரத்து கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சித்துமூன்றடைப்பு பவுல்ராஜ் கூறுகையில், ‘‘கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் வந்த சிறிதளவு தண்ணீரை  சேமிக்க, எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒருவர் என கிளம்பி, பொது மக்கள் சார்பாக கிராம பணத்தை கொண்டு மணல் மூட்டைகள் தயார் செய்து தற்காலிக தடுப்பணை கட்டினோம். அப்படி கட்டி தோப்பூரில் கண்மாயை நிரப்பி வகுத்துஓடை வழியாக சித்துமூன்றடைப்பு கண்மாய்க்கு தண்ணீர் நிரப்பினோம். அதற்கு பிறகு மழை பொய்த்து போனது.  தண்ணீரும் இல்லை.

எனவே வரும் காலத்தில் விவசாயம் செய்ய நினைக்கும் விவசாயிகளின் நலன் கருதி அரசாங்கம் தெற்காற்றில் தோப்பூரில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அல்லாளப்பேரி விஸ்வா கூறுகையில், ‘‘விவசாயம் முக்கிய தொழிலாக உள்ள இந்த பகுதியில் ஆறுகளையும், வரத்துக்கால்வாய்களையும் தூர்வாரி மராமத்து செய்வதில் அரசு ஆர்வம் காட்டாமல் உள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரத்துக்கால்வாய், ஆறுகள் தூர்வாறுதல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும். குடிமராமத்து திட்டத்தில் தெற்காற்றை தூர்வாரினால் பல விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்’’ என்றார்.

முடுக்கன்குளம் சவுந்தரபாண்டி கூறுகையில், ‘‘நான் டூவீலர் மெக்கனி வேலை செய்து வருகிறேன். கிராமத்தில் விவசாய நிலம் இருக்கு. ஆனால் மழை இல்லை. மழை பெய்தாலும் கண்மாய்க்கு தண்ணீர் வராது. இதனால் விவசாயத்தை விட்டுவிட்டு மெக்கானிக் வேலை செய்து பிழைத்து வருகிறேன். நாங்கள் மீண்டும் விவசாயம் செய்யும் வகையில், தெற்காறு மற்றும் அனைத்து வரத்து கால்வாய்களையும் துர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : kariyapatty ,KARAYAPATTI SOUTHERN TIME , kariyapatty , Aru[ukkottai,therkaaru
× RELATED வாறுகால் வசதியின்றி தெருக்களில்...