×

முதன்முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது சவுதி அரசு : சுற்றுலா விசா மூலம் மெக்கா, மதீனாவுக்கு செல்ல முடியாது என அறிவிப்பு

சவுதி அரேபியா : இஸ்லாமிய தலைமைவாத கட்டுப்பாடுகளுக்கு பெயர் பெற்ற சவுதி அரேபியாவில் முதன்முறையாக சுற்றுலா பணிகளுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வளத்தை மட்டுமே பொருளாதார ஆதாரமாக கொண்டு இருந்த சவுதி அரேபியா, தற்போது சுற்றுலா துறையில் வருவாய் ஈட்ட தீர்மானித்துள்ளது. இந்த சுற்றுலா திட்டம் என்பது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் மையப்பகுதிகளில் ஒன்றாகும். அதன்படி 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசர் வழங்க அந்த அரசு முன்வந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தற்போது 3% பங்களிப்பை வழங்கும் சுற்றுலாத் துறையை 2030ம் ஆண்டுக்குள் 10% ஆக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாட்டு மக்களை கவரும் வகையில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று கூறியுள்ள சவுதி அரசு, அதே வேளையில் தங்கள் நாட்டு கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. சுற்றுலா விசாவை பயன்படுத்தி மெக்கா, மதீனா ஆகிய இடங்களுக்கு செல்ல முடியாது என்றும் சவுதி அறிவித்துள்ளது. முன்னதாக சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலையின் மீது  ஆள்இல்லா விமான தாக்குதல் நடைபெற்றது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இரானை குற்றம்சாட்டியது. பேரழிவுகரமான இந்த தாக்குதலுக்கு இரண்டு  வாரங்களுக்குப் பிறகு தற்போது இந்த சுற்றுலா விசா அறிவிப்பு வந்துள்ளது.சுற்றுலாவை உக்குவிக்கும்  முயற்சியில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ள பார்வையாளர்களுக்கு கடந்த ஆண்டு சவுதி அரேபியா விசா வழங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : Saudi , Saudi Arabia, Travel, Visa, Mecca, Medina
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...