×

மாமுல் கொடுக்க மறுக்கும் லாரி டிரைவர்கள் இ-சலான் மூலம் போலீஸ் அபராதம் விதிப்பு

*நாமக்கல் லாரி உரிமையாளர்கள் குழப்பம்

நாமக்கல் : மாமுல் கொடுக்க லாரி டிரைவர்கள் மறுப்பதால், இ-சலான் மூலம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் நாடு முழுவதும் சரக்கு ஏற்றிச் செல்கிறது. தற்போது நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதி மீறலுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கு இ-சலான் மூலம் அபராதம் விதிக்கும் புதிய முறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் வாகனத்தை சோதனை செய்யும்போது, எதாவது விதி மீறல் இருந்தால் அந்த இடத்திலேயே இ-சலான் மூலம் அபராதத் தொகையை செலுத்தவேண்டும். பணம் இல்லாவிட்டால் அவர்கள் வங்கிக்கு சென்று அபராதம் கட்டவேண்டும். இந்த விபரங்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் சென்றுவிடும்.

இந்த புதிய நடைமுறைப்படி தற்போது நாமக்கல் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு ₹200 அபராதம் கட்டவேண்டும். ₹600கட்டவேண்டும் என தொடர்ந்து எஸ்எம்எஸ் மூலம் காவல்துறையின் இணையதளத்தில் இருந்து தகவல் வந்த வண்ணம் உள்ளது. இதனால், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், வெளியூர் செல்லும்போது லாரி டிரைவர்களிடம் போலீசார் மாமுல் வசூலிப்பது பல ஆண்டாக நடைமுறையில் உள்ளது.

பல இடங்களில் போலீசார் மாமுல் கேட்பதால் டிவைரர்களிடம் பணம் இல்லாத நிலை ஏற்படுகிறது. மாமுல் கொடுக்க மறுக்கும் டிரைவர்களை போலீசார் மிரட்டுகிறார்கள். கைசெலவுக்கு கூட பணம் இல்லை என டிரைவர்கள் கூறும்போது, வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்துக்கொண்டு அபராதம் விதிக்கிறார்கள். அது குறித்த விபரம் எங்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழகம் மற்றும் மகராஷ்டிரா மாநில காவல்துறையிடம் இருந்து தான் அதிக அளவில் எஸ்எம்எஸ் வருகிறது. அபராத தொகையை எங்கு கட்டவேண்டும், எதற்காக அபராதம் போன்ற விபரங்கள் கூட அந்த எஸ்எம்எஸ்சில் இல்லை.

டிரைவர்களை போனில் அழைத்து கேட்டால் மாமுல் கொடுக்காததால் இப்படி செய்கிறார்கள் என்கிறார்கள். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து திண்டுக்கல் வரும் வழியில் 7 இடங்களில் போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்கிறார்கள். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும், மாமுல் கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொடுக்காவிட்டால் இது போன்ற புதிய முறையில் வழக்கு போட்டு அபராதம் விதிக்கிறார்கள். ₹200, ₹600 அபராதம் போடும் அளவுக்கு என்ன விதிமீறில் இருக்கிறது என்பது தெரியவில்லை.

இவ்வாறு லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். லாரி உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை குறித்த விபரம் அந்தந்த ஆர்டிஓ அலுவலகத்தின் இணையதளத்துக்கும் சென்றுவிடுகிறது. லாரி உரிமையாளர்கள் தகுதிச்சான்று புதுப்பிப்பு, இன்சூரன்ஸ் கட்ட செல்லும்போது, அபராதத்தெகையையும் சேர்த்து செலுத்தவேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்து வசூலித்து வருகின்றனர்.

Tags : Lorry drivers , fine,Lorry Drivers ,bribe,Echallan
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்...