×

தர்மபுரி அருகே இடிந்து விழும் அபாயத்தில் அரசு பள்ளி மேற்கூரை

*அச்சத்தில் மாணவர்கள்

தர்மபுரி : தர்மபுரி அதியமான் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தின் மேற்கூரை இடிந்து விழுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி அதியமான் அரசு பள்ளி, கடந்த 163 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு பள்ளியாக தொடங்கப்பட்டது. பின்னர் தமிழ் கற்பிக்கும் தொடக்கப்பள்ளியாக மாற்றப்பட்டு, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது. கடந்த 1978 முதல் 80ம் ஆண்டு வரை, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி இந்த பள்ளி வளாகத்தில்தான் நடந்தது.

 அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 7 ஆயிரம் மாணவர்கள் படித்தனர். பள்ளியில் குடிநீர், வகுப்பறைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைந்ததையடுத்து மாணவர்களின் எண்ணிக்கையும் சரிந்தது. நடப்பாண்டில் இப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை 1030 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள உயிரியல் ஆய்வகத்தின் கட்டிடம் சேதம் அடைந்து வருவதால், மேற்கூரை அடிக்கடி உடைந்து விழுந்து மாணவர்கள் காயம் அடைகின்றனர்.

மேற்கூரை பெயர்ந்து விழுவதால், புதிய ஆய்வக கட்டிடம் கட்டி தர வேண்டும் என, பள்ளி கல்வி அலுவலர்களுக்கு பள்ளி தரப்பில் வேண்டுகோள் விடுத்தும் பல ஆண்டுகளாக புதிய கட்டிடம் இன்றி ஆபத்தான முறையில் பழைய ஆய்வகத்தை மாணவர்கள் பயன் படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளியில் இயற்பியல், வேதியல் போன்ற பாடங்களுக்கு தனி தனியாக ஆய்வகம் இல்லாமல் உள்ளது. இதனால் இயற்பியல், வேதியல் கற்கும் மாணவர்கள், உயிரியல் ஆய்வகத்திலேயே இட நெருக்கடியில் பயின்று வருகின்றனர்.

ஆய்வகம் மைதானத்தின் அருகே உள்ளதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மைதானம் நீர் நிரம்பி தெப்பக்குளத்தின் நடுவே ஆய்வகமும், பள்ளியும் மிதந்து வருகிறது. பல வருடங்களாக மைதானத்தில் தேங்கும் மழைநீரை வடிக்க வடிகால் வசதி வேண்டும் என பள்ளி தரப்பில் கோரிக்கை விடுத்தும், வடிகால் அமைக்கப்படவில்லை. எனவே உயிரியல் ஆய்வகத்திற்கு புதிய கட்டிடம், வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கும் தனி ஆய்வகம் அமைக்க வேண்டும். மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற வடிகால் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government school ,Dharmapuri ,Dharmapuri Government School Roof , Dharmapuri ,Government School ,Roof ,Students
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...