கடலாடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை,பிரசவ வார்டுக்கு கூடுதல் கட்டிடம் அமைக்கப்படுமா?

சாயல்குடி :  கடலாடி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிடங்களை கட்டி, அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டுகளை துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய கடலாடி தாலுகா அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 20க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பணியில் மூன்று மருத்துவர்களும், ஒரு மருத்துவ அலுவலரும் உள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் படுக்கைகளை கொண்ட கட்டிட வசதி இல்லாததால் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முடியாமல், ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். கடலாடி அருகில் கிழக்கு கடற்கரை சாலை செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்று மாரடைப்பு, விஷக்கடி, தற்கொலை முயற்சி போன்ற அவசர சிகிச்சை பெறுவோருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இருந்தும், போதிய வசதியில்லாததால், நோயாளிகளின் உறவினர்கள் அவசர தேவை கருதி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை போன்ற வெளியூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்கின்றனர்.

அப்படி செல்லும் போது பாதி வழியிலேயே உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனையில் பிரசவகால பரிசோதனை, பிரசவம் போன்றவை பார்க்க பெண் மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் இல்லை. இதனால் சாயல்குடி, கமுதி போன்ற வெளியூர்களுக்கு சென்று வருவதால் கர்ப்பிணிகள் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. அவசரத்திற்கு கடலாடி பகுதிக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் இல்லை, எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் இங்கு இருந்தும், அவற்றை இயக்க பணியாளர்கள் இல்லாததால் இயந்திரங்கள் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் மருத்துவமணையில் கர்ப்பிணி பெண்கள் போதிய சிகிச்சை பெற முடியாமல் வெளியூர்களுக்கு சென்று அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2008ம் ஆண்டு சுமார் 2 கோடி மதிப்பீட்டில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. கட்டிடம் தரமற்று கட்டப்பட்டதில் இருந்து பயன்பாட்டிற்கு வராததால், கட்டிடம் தற்போது சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இங்கிருந்த படுக்கைகள். மருத்துவ உபகரணங்களை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு எடுத்து சென்று விட்டனர். கடலாடியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் உள்நோயாளிகளாக அனுமதிக்கபட்டவர்கள் கொசுக்கடி மற்றும் புழுக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கடலாடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு. பிரசவ வார்டு துவங்க மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடலாடி வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: