×

தனிமைச்சிறையில் கைதியை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தல்?

* சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

மதுரை : தனிமைச்சிறையில் உள்ள கைதியை நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில், சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, கீரைத்துறையைச் சேர்ந்த சோலைமதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் முருகன் (எ) சப்பாணி முருகன் மீது மதுரை, புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் காவல் நிலையத்திலுள்ள ஒரு வழக்கிற்காக கடந்தாண்டு அக். 14ல் பரமக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பல வழக்குகளில் விடுதலை அடைந்துள்ளார். ஒரு வழக்கில் கூட தண்டனை பெறவில்லை.

 சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த என் கணவரை, கடந்த ஜனவரி மாதம் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றினர். இதுகுறித்த விபரம் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. செப். 19ம் தேதி பரமக்குடி நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை சந்தித்து பேசினேன். அப்போது சிறையில் தன்னை தவறாக போலீசார் நடத்துவதாக கூறினார். மேலும், விசாரணைக்கு அழைத்து சென்று திரும்பவும் சிறைக்கு கொண்டு செல்வர். அப்போது, கஞ்சா மற்றும் செல்போன் வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறி சோதனை என்ற பெயரில் ஆடைகள் இல்லாமல் தன்னை மணிக்கணக்கில் நிர்வாணமாக நிற்க வைத்து சித்ரவதை ெசய்வதாகவும் கூறினார். என் கணவரை மனரீதியாக சிறையில் போலீசார் துன்புறுத்துகின்றனர்.

விசாரணைக்கு அழைத்து வந்து திரும்ப கொண்டு செல்லும்போது, உணவு வசதி செய்து தருவதில்லை. சிறையிலுள்ள மற்ற கைதிகளை தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் பேச அனுமதிக்கின்றனர். ஆனால், கடந்த 20 நாட்களாக என் கணவரை மட்டும் தொலைபேசியில் பேச அனுமதிப்பதில்லை. இதேபோல் கடந்த ஏப்ரல் முதல் என் கணவரை தனிமைச்சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் என் கணவர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார். சிறைக்குள்ளேயே கொலை ெசய்யப்படலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே, உடனடியாக என் கணவரை தனிமைச்சிறையில் இருந்து விடுவிக்கவும், சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். வக்கீல் அழகுமணி, ராஜசேகர் ஆஜராகி, ‘‘சிறை விதிகளை மீறியும், மனித உரிமை மீறலில் ஈடுபடும் வகையில் சிறையில் போலீசார் மனரீதியாக துன்புறுத்துகின்றனர்’’ என்றனர். இதையடுத்து நீதிபதி, மனு குறித்து சிறைத்துறை ஏடிஜிபி, கடலூர் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags : prisoner ,Madurai Jail , Madurai , madurai prison,Harassment ,prisoner
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...