×

தொடர் மழையால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு : ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று நடந்த கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

மாடுகளை தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வர். வாரந்தோறும் சராசரியாக ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனையாகும். இந்நிலையில், ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் அவர்களது மாடுகளை விற்க முன்வர வில்லை.இதனால், ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று கூடிய சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதன்காரணமாக, மாடுகளை வாங்க வந்த வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில்,` தொடர் மழையால் பாசன வாய்க்கால்களிலும், ஆறுகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் அவர்களது விளை நிலங்களில் பயிர்களை சாகுபடி செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். மேலும், அவர்களது கறவை மாடுகளை விற்க முன் வருவதில்லை. இதனால், நேற்று நடந்த சந்தையில் பசு-300, எருமை-100, கன்று-100 என 500 மாடுகளே விற்பனைக்கு வந்தது. இதில், 90 சதவீதம் விற்பனை ஆனது’ என்றார்.

Tags : Karungalpalayam , heavy rain,Karukalpalayam ,Cow Market ,Cow
× RELATED பறக்கும் படை அதிகாரிகளின்...