×

தீவிரவாதத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்..இரண்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதற்கு இம்ரான் கான் பதிலடி

நியூயார்க்: தீவிரவாதத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசாதீர்கள், அவை இரண்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாக பேசியுள்ளார். ஹூஸ்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். டிரம்ப் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஐ.நா.வில் வெறுப்புணர்வு பேச்சுக்கு எதிரான வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் என்ன தொடர்பு, மதத்தோடு தீவிரவாதத்தை இணைத்துப் பேசாதீர்கள். மக்களை வெறுப்பேற்றும் வகையில், அரசியல் ரீதியாக பேசப்பட்டு, அநீதி இழைக்கப்படுகிறது. இப்போது இஸ்லாம் மதத்தை தீவிரவதத்தோடு இணைக்கிறார்கள். இந்த உலகில் ஒரு இஸ்லாம் மதம் மட்டுமே உள்ளது. இறைத்தூதர் அருளிய இஸ்லாத்தை மட்டுமே பின்பற்றி வருகிறோம். வேறு எந்த இஸ்லாம் மதமும் இல்லை.

நியூயார்க்கில் இரட்டை கோபுரம் தகர்க்கப்படுவதற்கு முன், 75% மனிதவெடிகுண்டு தாக்குதல்களை இலங்கையை சேர்ந்த இந்துக்களான விடுதலைப்புலிகள்தான் செய்தார்கள். 2ம் உலகப்போரில் ஜப்பானியர்கள் தற்கொலைப்படைகளாக மாறினார்கள். ஆதலால், யாருடைய மதத்தையும் பற்றி பேசாதீர்கள். மக்களின் நம்பிக்கைகள் அடிப்படையாக வைத்து பாகுபாடும் வன்முறையும் சிறுபான்மை சமூகத்தினர் மீது நடக்கிறது, இது அவர்களின் கோபத்தை மேலும் தூண்டும். இஸ்லாம் மதத்தின் மீது மக்கள் பற்றுள்ளவர்கள், இறைத்தூதர் மீது மிகுந்த மரியாதை, பயபக்தி கொண்டவர்கள் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும், என கூறியுள்ளார். முன்னதாக, தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்தோடு இணைத்துப் பேசியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் இந்து மதத்தைச் சேர்ந்த எம்.பி. ரமேஷ் குமார் வங்வானி கண்டனம் தெரிவித்திருந்தார். இப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் அதிபர் டிரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Donald Trump ,Imran Khan ,US , Terrorism, Religion, President Trump, Pakistan, Imran Khan, Islamic Terrorism, LTTE
× RELATED வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்