×

75 வயதை கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இனி கட்டாயமாக சீட் கிடையாது: பாரதிய ஜனதா கட்சி திட்டவட்டம்

சண்டிகர்: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 75 வயது கடந்தவர்களுக்கு சீட் வழங்கப்படமாட்டாது என பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 70 வயதை கடந்தவர்களுக்கு எந்த ஒரு தேர்தலிலும் சீட் வழங்க கூடாது என்பது பா.ஜ., வின் கட்சி கொள்கைளில் ஒன்றாக உள்ளது. இதில் மாநில அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம் என்பதால், கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபைகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் பலவும் தேர்தல் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரையில் 90 சட்டசபை இடங்கள் உள்ளன.

இத்தேர்தலில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பலர் தங்களின் வாரிசுகளை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய மாநில பா.ஜ.க தலைவர் சுபாஷ் பராலா, மாநில தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செயல்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வாரிசு அரசியலை ஊக்குவிக்க கூடாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். இதனையடுத்து 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், தங்களின் வாரிசுகளுக்கும் சீட் வழங்கப்பட மாட்டாது. இதுவரையில் யாரும் இந்த விதிமுறையை மீறவில்லை. அதே நேரத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ள பெண் வேட்பாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். விரைவில் இரு மாநில தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


Tags : Bharatiya Janata Party ,elections , 75 years old, election, contest, successor, BJP
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி