×

6-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணி ஜனவரியில் தொடங்கப்படும்; கீழடியில் ஆய்வு செய்த பின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

கீழடி: கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3ம் கட்டமாக அகழாய்வு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4ம் கட்ட அகழாய்வை மேர்கொண்டது. இதைத்தொடர்ந்து 5ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை நடத்தப்பட்ட 4 கட்ட அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 5ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன்றவை கண்டறியப்பட்டன. இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இதுவரை 13,638 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆய்வு செய்ததில் 2,600 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழடியில் கிடைத்த பழமையான தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது கீழடி, கொந்தை, அகரம் மணலூரில் 6-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணி ஜனவரியில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஜுன் 13-ம் தேதி தொடங்கிய கீழடி 5-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Tags : Mafa Pandiyarajan ,Minister ,Kilati , Kilati,Excavation work, Minister, Mafa Pandiyarajan
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர்,...