×

நிலவின் அருகே சென்று தகவல் தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை; நாசா அறிவிப்பு

வாஷிங்டன்: நிலவின் அருகே வரை சென்று தகவல் தொடர்பு கிடைக்காமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா அறிவித்துள்ளது. நிலவின் தென்துருத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ சமீபத்தில் அனுப்பியது. செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியதில், நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் விழுந்து சாய்ந்து கிடப்பது தெரிய வந்தது.

விக்ரம் லேண்டரின் 14 நாள் ஆயுட்காலமும் முடிவடைந்தது. அதனுடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் இன்றளவும் பயனளிக்கவில்லை. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் போது மிகுந்த வேகத்துடன் இறக்கப்பட்டதால், அது தரையில் மோதி கவிழ்ந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக செயலிழப்பு ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

இதையடுத்து 1471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர், மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகத்துடன் தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட தவறால் அது சேதமடைந்திருக்க கூடும். விரைவில் இஸ்ரோ விக்ரம் ஏன் செயலிழந்தது? என்று விரிவான அறிக்கையை வெளியிடவுள்ளது. இதனிடையே விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை அமெரிக்காவின் நாசாவும் கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களில் லேண்டர் இருக்கும் இடம் தெரியவில்லை என்று நாசா அறிவித்துள்ளது.

Tags : Vikram Lander ,moon ,NASA ,announcement ,ISRO , ISRO, NASA, Vikram Lander, Chandrayaan 2,
× RELATED பக்தனுக்காக அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய அபிராமி