×

லண்டன் சொத்து வழக்கில் வதேராவை காவலில் விசாரிக்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

புதுடெல்லி: லண்டன் சொத்து தொடர்பான பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி, டெல்லி  உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வலியுறுத்தி உள்ளது.லண்டனில் ரூ.17 கோடி மதிப்பில் முறைகேடாக சொத்து வாங்கியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின்  கணவர் ராபர்ட் வதேரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் வதேராவுக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் முன்  ஜாமீன் வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற  நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `இந்த பண  மோசடி வழக்கில் வதேராவுக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரிய  வந்துள்ளது. அதனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.  அவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காததால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது,  என்று அமலாக்கத் துறையின் வழக்கறிஞர் வாதிட்டார்.வதேரா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில்,  ‘`விசாரணைக்கு வதேரா முழுமையாக  ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். அமலாக்கத் துறையின் எல்லா சம்மனுக்கும் ஆஜராகி உள்ளார். அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை அவர்  ஒப்புக் கொள்ளவில்லை என்பதற்காக, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூற  முடியாது,’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : Vaderra ,London ,London Property Vaderra , London, Property, Vaderra , remanded , custody
× RELATED கொரோனா கண்டுபிடிக்க பொது இடத்தில்...