×

ஜோ பிடன் பற்றி உக்ரைன் அதிபரிடம் பேசிய விவகாரம் எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் பதவி நீக்க தீர்மானம் ‘ஜோக்’: டிரம்ப் கருத்து

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன். இவர் அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் களம் இறக்கப்படுவார் என தெரிகிறது. இவர் மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டார் என புகார் எழுந்துள்ளது. ஜோ  பிடனின் மகன் உக்ரைன் நாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்ட உக்ரைனின் அரசு தலைமை வழக்கறிஞர் விக்டர் ஷோகினை மாற்றக்கோரி ஜோ பிடன் மற்றும் சில மேல் நாட்டு தலைவர்கள் உக்ரைன் அரசிடம் கூறியுள்ளனர். இதை அறிந்த அதிபர் டிரம்ப், ஜோ பிடன் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கடந்த ஜூலை 25ம் தேதி பேசியுள்ளார். அதற்கு முன்  உக்ரைனுக்கு வழங்க வேண்டிய 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளார். இதனால், அதிபர் டிரம்ப் தனது அரசியல் எதிரியான ஜோ பிடன் மீது களங்கம் ஏற்படுத்த தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சுமத்தினர். உக்ரைன் அதிபருடன் டிரம்ப் போனில் பேசிய உரையாடல்களை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

 இதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் போனில் பேசிய பேச்சின் சுருக்கம் வெளியானது. அதில் அதிபர் டிரம்ப் பேசும்போது, ‘‘ஜோ பிடன் மகன் பற்றி பல விஷயங்கள் பேசப்படுகிறது. உங்கள் நாட்டில் நடந்த விசாரணையை ஜோ பிடன் நிறுத்தியுள்ளார். இது மிகவும் மோசமானது. இதில் உள்ள விஷயங்களை அறிய பலர் விரும்புகின்றனர். இது குறித்து நீங்கள் விசாரணை நடத்த வேண்டும்’’ என கூறியுள்ளார். விசாரணை நடத்துவதாக ஜெலன்ஸ்கியும், அதிபர் டிரம்பிடம் உறுதி அளித்துள்ளார். அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மூர்க்கத்தனமான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என கூறியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த டிரம்ப், ‘‘நான் பதவியை துஷ்பிரயோகம் செய்யவில்லை. எதிர்கட்சியினர் எனக்கு எதிராக சதி செயலில் ஈடுபடுகின்றனர். நான் யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. போனில் பேசியதற்காக பதவி நீக்க விசாரணை கொண்டு வருவது நகைச்சுவையான செயல்,’’ என்றார்.

Tags : Joe Biden ,chancellor ,Trump ,Ukrainian ,President ,Opposition Parties , Ukrainian president ,Joe Biden,Trump's opinion
× RELATED அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை...