×

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம் : 20 பேர் பலி

அம்பான்: இந்தோனேஷியாவில் நேற்று 6.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 20 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நேற்று காலை 8.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகளாக பதிவானது. அம்பானில் இருந்து வடகிழக்கே 37 கிமீ தொலைவில் 29 கிமீ ஆழத்தை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகி இருந்தது.கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். நிலநடுக்கத்தின் காரணமாக இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண்ணும் உயிரிழந்தார்.

உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலர் அச்சத்தின் காரணமாக வெளியேறினார்கள். மேலும், பல நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகம் மூலமாக பாதுகாப்பாக கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அம்பான் நகரம் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாகவும், இதில் ஒன்று 5.6 ரிக்டர் அளவாக பதிவானதாகவும் இந்தோனேஷியா வானிலை ஆய்வு மையத்தின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பிரிவு தலைவர் ரஹ்மத் டிரையோனோ தெரிவித்துள்ளார்.




Tags : Earthquake ,Indonesia ,Buildings , Indonesiam Earthquake,Buildings,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்