×

காந்திய கொள்கைகளால் ஊழல், தீவிரவாத பிரச்னைக்கு தீர்வு: ஜனாதிபதி ராம்நாத் பேச்சு

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் ‘அகிம்சை விஷ்வ பாரதி அமைப்பு’ ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: உலகில் அமைதியும் அகிம்சையும் நிலவ ஆன்மீக கொள்கைகள் அவசியம் என்பதை மகாத்மா காந்தி மிக நன்றாக அறிந்திருந்தார். உண்மை, அகிம்சை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மூலமே மனித சமூகம் மேம்பாடு அடையும் என்பதை புரிந்து வைத்திருந்தார். அவரது கொள்கைகள் தற்கால நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக விளங்குகிறது. எதிர்காலத்திலும் அது தொடர்புடையதாக இருக்கும். தற்போது, உலகம் சந்தித்து வரும் தீவிரவாதம், ஊழல், ஒழுக்கக்கேடு, மதத்தை அடிப்படையாக கொண்ட வேறுபாடுகள், பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்கு தீர்வு காண்பதாக, காந்திய கொள்கைகள் விளங்குகின்றன. 65 சதவீத இளைஞர்களை கொண்ட இந்திய மக்கள் தொகையில், காந்திய கொள்கைகள் சிறந்த இந்தியாவை உருவாக்க உதவும்.

வரும் அக்டோபர் 2ம் தேதி தேசத்தந்தை காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை நாம் கொண்டாட உள்ளோம். இந்த தருணத்தில் அவரது பிறந்தநாளை ஐநா சபை சர்வதேச அகிம்சை தினமாக அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், காந்தியின் கொள்கையான அகிம்சை  உலகுக்கு அவசியம் தேவை என்பதை உணர முடிகிறது. காந்திய கொள்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவும் உலகமும் சிறப்பான நிலையை அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Ramnath ,Gandhian , Gandhian principle, Corruption , Radical Problem, Speech
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...