×

பரோல் கேட்டு ராபர்ட் பயாஸ் வழக்கு

சென்னை:  முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயாஸ், தன் மகன்  தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  இலங்கை அகதியான நான் ராஜிவ் கொலை வழக்கில் 1991ம் ஆண்டு முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன்.  கைதுக்கு  பின், என் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டனர்.  நெதர்லாந்தில் வசிக்கும் என் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்துறை டிஐஜி-க்கு மனு அளித்தேன்.  மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு பரோல் வழங்குமாறு சிறைத்துறை டிஐஜி-க்கு உத்தரவிட வேண்டும்.

 மேலும், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் முன் கூட்டி விடுதலை செய்ய மாநில அமைச்சரவை, ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், எனக்கு பரோல் வழங்கினால், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வக்கீல் சந்திரசேகரன் வீட்டில் தங்குவேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு மனுவில்  கூறியுள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.



Tags : parole hearing , Parole, Robert Bias, Caset
× RELATED ராபர்ட் பயாஸ் ‘பரோல்’ கேட்ட வழக்கு விசாரணை தள்ளிவைப்பு