×

நாங்குநேரி காங். வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாகிறது: 3 பேர் பட்டியலுடன் டெல்லி விரைந்தார் கே.எஸ்.அழகிரி

சென்னை: நேர்காணலில் தேர்வு செய்த 3 பேர் பட்டியலுடன் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்றுள்ளார். பட்டியலை இறுதி செய்து, நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை கட்சி தலைமை இன்று அறிவிக்கிறது.    வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுக்கள் கடந்த 3 நாட்களாக சத்தியமூர்த்தி பவனில் பெறப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் இந்த வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. இதில், மூத்த தலைவர் குமரி அனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், பரப்பாடி காமராஜ், மாவட்ட தலைவர்கள் சிவக்குமார், சங்கரலிங்கம், முன்னாள் எம்எல்ஏ வேல்துரை என 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களிடம் நேற்று முன்தினம் மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். இறுதியாக 3 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த பட்டியலுடன் நேற்று மதியம் விமானம் மூலம் கே.எஸ்.அழகிரி டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை தொடர்ந்து, எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வசந்தகுமார் மற்றும் வாய்ப்பு கேட்டு நேர்காணலில் கலந்து கொண்ட பலரும் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர்.
  கே.எஸ்.அழகிரி நேற்று இரவு தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார்.  அப்போது இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பெயருடன் கூடிய பரிந்துரை கடிதத்தை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி இறுதி செய்து அவரது ஒப்புதலுடன் இன்று இரவுக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Candidate Announcement ,KSAlagiri Nonguneri Cong ,Delhi ,Keesalakiri , Nanguneri, Congress candidate, Delhi, KS Alagiri
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...