×

ரவுடி என்கவுன்டர் நடந்த இடத்தில் குடியிருப்புவாசிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை: வீடியோவில் பதிவு

சென்னை: சென்னை, கொரட்டூரில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரடிவு மணிகண்டன் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் மாஜிஸ்திரேட் 3 மணி நேரம் விசாரணை நடந்தினார். இது முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர், மீது தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, கடத்தல்,  கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டனை, சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவு பி-செக்டர், 4வது தெருவில் வீட்டில் இருந்தபோது போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது நடந்த தாக்குதலில் காயமடைந்த சப்- இன்ஸ்பெக்டர் பிரபு, பிரகாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அம்பத்தூர் மாஜிஸ்திரேட் தனஞ்செழியன் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அவரது உடல் சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.  நேற்று மாலை சொந்த ஊரான குயிலாப்பாளையம் கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், நேற்று மாலை 5.30 மணி அளவில் மாஜிஸ்திரேட் தனஞ்செழியன்,  மணிகண்டன் சுட்டுக்கொல்லப்பட்ட வீட்டை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு ரத்தம் கறை படிந்த கத்தி, துப்பாக்கி குண்டுகளை  பறிமுதல் செய்தனர். மேலும், அவர் சம்பவம் குறித்து அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதுவும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், மணிகண்டன் தங்கி இருந்த வீட்டில் வெடிகுண்டு, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா எனவும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ய முடிவு செய்து உள்ளனர்.  ஆய்வுக்கு பிறகு மாஜிஸ்திரேட் தனஞ்செழியன், விசாரணை அறிக்கையை மாவட்ட நீதிபதி, கலெக்டரிடம் ஒப்படைப்பார் என தெரிகிறது.


Tags : residents ,encounter ,Rowdy ,Magistrate inquiry , Rowdy Encounter, Magistrate, Inquiry, Video
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...