×

புதிதாக எந்த தொழிற்சாலைகளும் வரவில்லை தமிழகத்தில் ஏற்கனவே உள்ள நிறுவனங்களே விரிவாக்கம் செய்து வருவதாக குற்றச்சாட்டு: மேலும் 15 நிறுவனங்களிடம் முதல்வர் புரிந்துணர்வு

சென்னை: தமிழகத்தில் புதிதாக எந்த தொழிற்சாலைகளும் வரவில்லை என்றும், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள நிறுவனங்களே விரிவாக்கம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மேலும் 15 நிறுவனங்களிடம் முதல்வர் எடப்பாடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10 ஆகிய இரண்டு  நாட்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள்  மாநாடு நடத்தப்பட்டது. இந்த  மாநாட்ல் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கான முதலீடுகள்  கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி, இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 3 லட்சத்து 441 கோடி முதலீடுகள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார். 10 லட்சத்து 50 பேருக்கு வேலை கிடைக்கும் என பேசினார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போதும் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும், இதன்மூலம் தமிழகத்தில் ₹8,830 கோடி அளவுக்கு முதலீடுகள் வர உள்ளதாகவும், 35,520 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பரபரப்பான அறிவிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, 2019ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற மாநாடு மற்றும் கடந்த மாதம் முதல்வர் வெளிநாடு பயணம் சென்று தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. இதற்கு உதாரணம், தலைமை செயலகத்தில் 14 துப்புரவு பணிக்கு சுமார் 4 ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதே சான்றாகும்.

இந்நிலையில், தமிழக அரசு 2015ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கையெழுத்தான நிலையில், இதுவரை தமிழகத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் உரிமை சட்டத்தில் தமிழக அரசிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, “22 நிறுவனங்கள் மட்டுமே சோதனை அல்லது உற்பத்தியை தொடங்கியுள்ளது. அதன்படி 62,378 கோடி அளவிற்கு முதலீடுகள் வருவதாக கூறினாலும், 2015 ஜூலை முதல் 2018 மார்ச் வரை 34 தொழில் திட்டங்கள் 14,154 கோடி முதலீட்டில் துவக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தமிழக அரசு 6 லட்சம் கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தாலும், குறைவான அளவுக்கே தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் துவங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்களும், ஏற்கனவே தமிழகத்தில் தொழில் செய்து கொண்டிருந்து, தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காகவே முதலீடு செய்து வருவதையே பெரிய அறிவிப்பாக அரசு அறிவித்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமை செயலகத்தில் 15 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நேற்று தலைமை செயலகத்தில், தொழில் துறை சார்பில் 5,573 கோடியே 89 லட்சம் ரூபாய் முதலீட்டில் சுமார் 28,566 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் புதிய தொழில் திட்டங்களை துவங்கிட 15 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 1,480 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலான டாடா கன்சல்டன்சி சர்வீஸ், சைவீங் செட்டல் இன்டியா பிரைவேட் லிமிடெட் உட்பட 5 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 121 கோடியே 12 லட்சம் முதலீட்டில் சுமார் 1,280 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நிஷ்வின் புட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜெஎஸ் ஆட்டோகாஸ்ட் லிமிடெட் மற்றும் ஐடிடபிள்யு இண்டியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் துவக்கி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் டாடா கன்சல்டன்சி உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஏற்கனவே தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி பல லட்சம் கோடி ரூபாய்க்கு கடந்த 5 ஆண்டுகளாக புரிந்துணர்வு ஒப்பந்தமாகவே செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, தமிழகத்தில் அதிக தொழிற்சாலைகள் செயல்பாட்டுக்கு வரவும், இதன்மூலம் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தொழில் துறையில் அமைச்சர் மற்றும் செயலாளர்கள், அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தவறான தகவல்களை கூறி, திசை திருப்பி வருவதாகவும், ஏமாற்றுவதாகவும் கீழ்மட்ட அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : factories ,Tamil Nadu , Factories, 15 companies, CM
× RELATED மறைமலைநகரில் மூட்டை மூட்டையாக...