×

பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் பலியான சம்பவம்: அதிமுக பிரமுகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக நோட்டீஸ்: 2 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்

சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் இறந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என போலீசார் நோட்டீஸ் ஒட்டினர். மேலும் 2 தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர்.
தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ(23). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 12ம் தேதி பணி முடித்து மாலை 3 மணிக்கு தனது ஸ்கூட்டியில் துரைப்பாக்கம்-குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலையில்  பள்ளிக்கரணை வந்தார். அப்போது சாலையின் சென்டர் மீடியனில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண  வரவேற்பு பேனர் ஒன்று கழன்று சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த  சுபஸ்ரீ மீது பின்னால் வந்த  தண்ணீர் லாரி ஏறியதில் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மனோஜ்(25) என்பவரை கைது செய்தனர். பள்ளிக்கரணை சட்டம், ஒழுங்கு காவல் நிலைய போலீசார் மாநகராட்சி உதவி பொறியாளர் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். அனுமதியின்றி பேனர் அடித்து தந்ததாக கோவிலம்பாக்கம், விநாயகபுரத்தில் உள்ள அச்சகத்துக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் மனோஜ் முதல் குற்றவாளியாகவும், 2வது குற்றவாளியாக அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை சேர்த்து வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால், மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத, மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்நிலையில் ஜெயகோபால் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அதனால் கடந்த 2 வாரமாக போலீசார் ஜெயகோபாலை உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் ஜெயகோபால் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ஜெயகோபால் வீட்டிற்கு பள்ளிக்கரணை போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கச் சென்றனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டின் சுவற்றில் ஒட்டி உள்ளனர். மேலும் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை தேடி வருகிறார்கள். ஜெயகோபால் நெருங்கிய உறவினர்கள் சிலரிடம்  விசாரித்து வருகிறார்கள்.  ஓரிரு தினங்களில் ஜெயகோபால், மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Woman Engineer ,victim ,Engineer ,police station ,AIADMK ,persons , Banner fell, female engineer, sacrifice, AIADMK leader, notices, 2 persons
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...