×

தாராபுரம் பகுதியில் மர்ம பொருள் வெடித்ததா? பொதுமக்கள் பீதி

தாராபுரம்: தாராபுரம் பகுதியில் நேற்று காலை 10 கி.மீ. சுற்றளவுக்கு திடீர் வெடி சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் நேற்று காலை 9.15 மணிக்கு பலத்த அதிர்வுடன் கூடிய வெடிச்சத்தமும் அதனைத்தொடர்ந்து விமானம் சென்ற சப்தமும் கேட்டது. இதனால் விமானத்திலிருந்து வெடிபொருள் வெடித்துச் சிதறியதா? அல்லது நிலத்தில் மர்ம பொருள் வெடித்ததா? என தெரியவில்லை. இதேபோல் குண்டடம் காளிபாளையம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெடிச்சத்தத்தையும் அதிர்வையும் மக்கள் உணர்ந்ததாக தகவல்கள் பரவியது.  இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சூலூர் விமான படைபயிற்சி தளத்திலிருந்து தாராபுரம் உப்பாறு அணை பகுதிகளில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராணுவ வீரர்கள் சிறிய ரக விமானத்தில் இந்த பகுதிக்கு பறந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் பயிற்சி மேற்கொண்ட சிறிய ரக விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க் கோவை அருகே விவசாய நிலத்தில் விழுந்து அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அதேபோல் ஏதாவது விவசாய நிலப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பயிற்சி விமானத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் கீழே விழுந்துள்ளதா? அல்லது நிலஅதிர்வா?, மர்ம பொருள் வெடித்துள்ளதா? என தெரியவில்லை. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும்’ என்றனர்.

Tags : area ,Tarapuram ,panic , Tarapuram, Mystery, Public
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...