×

பிராட்வேயில் அறநிலையத்துறையின் அலட்சியத்தால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் பரிதாப பலி: தாய், அக்கா படுகாயம்,..அதிகாரிகள் மெத்தனம்

சென்னை: பிராட்வேயில் மழையில் நனைந்திருந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுவன் நசுங்கி பரிதாபமாக பலியானான். தாய், அக்கா படுகாயமடைந்தனர். சென்னை பிராட்வே சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (35). ேகாயம்பேட்டில் உள்ள பழக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (30). இவர்களுக்கு மெர்சி ஏஞ்சல் (10) என்ற மகளும், ஆலன் (8) என்ற மகனும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மெர்சி ஏஞ்சல் 5ம் வகுப்பும், ஆலன் 2ம் வகுப்பும் படித்து வந்தனர்.இவர்கள், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீட்டில் தூங்கினர். நேற்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட் செல்வதற்காக சுரேஷ்குமார் தயாராகிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென நனைந்திருந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த ஆலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

மெர்சி ஏஞ்சல், கலைவாணி ஆகியோர் படுகாயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். படுகாயத்துடன் இருந்தவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் முத்தியால்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுவன் ஆலன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுபோல், கடந்த 19ம்தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக மண்ணடி அய்யப்பன் செட்டி தெருவில் மழையில் நனைந்திருந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஜெரினா பானு என்ற பெண் பலியானார். இதுபோன்று அடிக்கடி விபத்து நடப்பதால் இங்கு வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

எனவே, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கை கைவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்பை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “பிராட்வே சண்முகராயன் தெருவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அறநிலையத்துறை முறையாக பராமரிப்பதில்லை. பழுதடைந்த வீடுகளை சீரமைக்க அனுமதி கேட்டால் இந்து அறநிலையத்துறை மறுத்து விட்டது. இதனால்தான் விபத்து ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டான். இனியாவது பழமையான கட்டிடங்களை இந்து அறநிலையத்துறையும் மாநகராட்சியும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவம் நடக்காது. விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.

Tags : Broadway ,house ,Sister ,Charity Department: Mother ,collapse , Broadway, Charity Department, Boy Kills, Mother, Sister
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்