×

டெங்குவால் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு கோரி பொதுநல வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலக்குறைவும்,  ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வருகிறார்கள். இந்நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காலை முறையிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், மனுதாக்கல் செய்தால் விசாரிப்போம் என்று தெரிவித்தனர்.இதையடுத்து, சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்துள்ளனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உருவாகின்றன. சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும், அதில் அரசு மெத்தனப்போக்கை காட்டுவதும்தான் இதற்கு முக்கிய காரணம். எனவே, டெங்கு பாதிப்பு வராமல் தடுக்க சுகாதார துறையை சார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றை கண்காணிக்க வேண்டும். டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Tags : dengue death victims ,family members ,dengue victims , Dengue deaths, welfare cases, High Court
× RELATED நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா...