×

பள்ளி விடுமுறை நாட்களில் பண்பாட்டு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை:  அரசுப் பள்ளிகளில்,  விடுமுறை நாட்களில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறோம். தற்போது விடுமுறை நாட்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பாதுகாக்கும் வகையில் இரண்டு மணி நேர வகுப்பு நடத்த உள்ளோம். ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்படும். அடுத்த மாத இறுதிக்குள் ஐசிடி திட்டம் என்னும் ஸ்மார்ட் வகுப்பறைகள் (ஒருங்கிணைந்த கணினி தொழில்நுட்ப திட்டம்) 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் செயல்படுத்தப்படும்.  

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த 5 ஆயிரம் புத்தகங்கள் விரைவில் பின்லாந்துக்கு அனுப்பி வைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளித்து வருகிறோம். நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை சுகாதாரத்துறைதான் கவனிக்க வேண்டும். தனியார் பயிற்சி மையங்கள் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அதனால், அந்த  மையங்களில் படித்து வெளியில் வருவோர் நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்ற நிலை உள்ளது. அதனால்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களின் வசதிக்காக பாடத்திட்டத்திலேயே நீட் தேர்வுக்கான கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அதே பள்ளியில் பணியாற்ற விரும்பினால் அனுமதிக்கப்படும். அதேபோல காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய முயற்சி எடுத்து வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் ஷூ  வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sengottaiyan ,school holidays ,training , School Holidays, Cultural Training, Minister Senkottaiyan
× RELATED சோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி