×

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4-ஆக பதிவு... அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் 38 பேர் உயிரிழந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் நகரின் அருகே நேற்று முன்தினம் மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், பஞ்சாப் மற்றும் கைபர்  பக்துன்கவா மாகாணங்களில் பல்வேறு நகரங்களில் உணரப்பட்டது. இதில் பல பகுதிகளில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இப்பகுதியில் கடந்த 14 ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் இது. இதில் பலியானோர் எண்ணிக்கை  38 ஆக அதிகரித்துள்ளது. அதிக சேதத்தை சந்தித்த ஜட்லான் பகுதியில் 11 பேரும், மிர்பூரில் 9 பேரும் இறந்துள்ளனர். இந்நிலையில் இன்றும் மீண்டும் அதே பகுதியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் 4. 4 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு பதற்றத்தோடு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

லாகூர், இஸ்லாமாபாத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. முந்தைய நிலநடுக்கத்தில் ஏற்கெனவே விரிசலாகி பலவீனமான கட்டிடங்களில் தற்போதைய நிலநடுக்கம் இடிபாடுகளை ஏற்படுத்தியது. அதில் சிக்கியவர்களை மீட்குப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


Tags : Earthquake ,Pakistan ,Kashmir , Pakistan, earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்