×

நீலகிரி சேரம்பாடி மதுபானம் கடை அருகே தண்ணீர் விற்ற முதியவர் பாட்டிலால் குத்தி கொலை தப்பியோடிய வாலிபர் கிணற்றில் விழுந்தார்: சிகிச்சைக்குபின் கைது செய்ய போலீஸ் நடவடிக்கை

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதி டாஸ்மாக் அருகே குடிமகன்களுக்கு தண்ணீர் விற்ற முதியவர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கொலையாளி கிணற்றில் விழுந்து தத்தளித்தார். அவரை போலீசார் மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் வசித்து வருபவர் வீரப்பன் என்கிற வீரபுத்திரன் (68). பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதை அரசு தடை செய்துள்ளதால் இவர் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களுக்கு  மதுபானத்தில் மிக்சிங் செய்வதற்கு மதுபான காலி பாட்டில்களில்  தண்ணீர் நிரப்பி விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.

அதன்படி, வழக்கம்போல் நேற்று இரவு அந்த பகுதியில் தண்ணீர் விற்பனை செய்துகொண்டிருந்தமார். அப்போது, ஒருவர் பீர் பாட்டிலை உடைத்து வீரபுத்திரனை கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த வீரபுத்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க இறந்தார். தகவலறிந்த சேரம்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தப்பியோடிய கொலையாளியை தேடினர். அப்போது அருகே இருந்த கிணற்றில் ஒருவர் விழுந்து கிடப்பது தெரிய வந்தது. கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சேரம்பாடி நாயக்கன்சோலை பகுதியை சேர்ந்த அருண்(30) என்பதும் அவர்தான் வீரபுத்திரனை பாட்டிலால் குத்தியதும் தெரிய வந்தது. டாஸ்மாக் கடையில் மது பானத்தில் மிக்சிங் செய்வதற்கு வீரபுத்திரனிடம் அருண் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, அருணை வீரபுத்திரன் தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. ஆத்திரம் அடைந்த அருண் மதுபாட்டிலால் வீரபத்திரனை தாக்கினார். பாட்டில் உடைந்த நிலையில் மேலும் வேகத்தில் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.

அப்போதுதான் அவர் கிணற்றில் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அருண் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்து அருண் வந்தவுடன் அவரை கைது செய்ய உள்ளனர். தற்போது மருத்துவமனையில் இருந்து அருண் தப்பிவிடாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : murder ,well ,Nilgiri Serambadi Liquor Store ,police action ,Nilgiris Serambadi Liquor Store , Nilgiris, Serambadi Liquor Store, stabbed to death
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...