×

நெல்லை தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த கொடூரம்: போதைக்கு அடிமையான மாணவன் மீட்கப்பட்டது எப்படி?

செய்துங்கநல்லூர்: போதைக்கு அடிமையாக்கப்பட்ட மாணவன் ஐகோர்ட் அதிரடி உத்தரவால் மீட்கப்பட்டான். நெல்லை தொழிலதிபரின் மகனான அவனுக்கு நேர்ந்த கொடூரம் குறித்த நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஆர்சி கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேதமுத்து. இவரது மகன்கள் ஜெயம், ராஜன் செல்லப்பா, செல்வகுமார். மகள் விமலா. விமலாவுக்கும் பாளை ஏ.ஆர்.லைனைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் 21 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆல்வின்(19), அஸ்வின்(14) ஆகிய இரு மகன்கள். தொழிலதிபரான சுரேஷ்குமாருக்கு நெல்லை பாலபாக்யா நகர், பாளை கேடிசி நகர், ஏஆர் லைன் ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இதுதவிர பல இடங்களில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.

இதன் மூலம் மாதம் ஆயிரக்கணக்கில் வருமானம் வந்தது. சொத்துக்களும் நிறைய இருந்தன. செல்வ செழிப்பாக வளர்க்கப்பட்ட இரு மகன்களும் பாளையில் உள்ள மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் 2016ம் ஆண்டு சுரேஷ்குமார் திடீரென்று இறந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மனைவி விமலா மற்றும் குழந்தைகள் மீளமுடியவில்லை. கணவரின் இழப்பால் உடல் நலம் குன்றிய விமலாவும் 2017ம் ஆண்டு இறந்தார். பெற்றோரை இழந்த இரு மகன்களும் தனியாக தவித்தனர். அப்போது அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். செய்துங்கநல்லூரில் வசித்து வரும் 3 மாமன்களிடம் அடைக்கலம் புகுவது என்று முடிவு செய்தனர். இதில் மூத்த மாமன் ஜெயம் இறந்துவிட்டதால் 3வது மாமன் செல்வக்குமாரிடம் செல்ல இருந்தனர். ஆனால் அந்த மாமனும் ஏதோ பிரச்னையில் சிக்கி அவரும் கொலை செய்யப்பட்டார்.

இரு மாமன்மார்கள் இல்லாத நிலையில் யாரிடம் செல்வது என தவித்த அண்ணன், தம்பிகள் தாங்களே சமைத்து சாப்பிட்டு பள்ளி செல்ல முடிவு செய்தனர். சில மாதங்கள் கழிந்த நிலையில் திடீரென்று தந்தை சுரேஷ்குமாரின் நண்பர் லட்சுமணன் என்பவர் அண்ணன், தம்பிக்கு அறிமுகமானார்கள். அவர் சுரேஷ்குமார் இருக்கும் காலத்தில் அடிக்கடி வந்து செல்வதை சிறுவர்கள் பார்த்து உள்ளனர். பள்ளி படிப்பு முடிந்து ஆல்வின் கல்லூரிக்கு செல்ல இருந்தார். இதற்காக புதிய பைக் வாங்கினார். நிலைமை இப்படி இருக்கையில் கடந்த ஆண்டு ஆல்வின் பாளையில் உள்ள ஒரு பல்க்கில் பெட்ரோல் போடும்போது பைக் டேங்க் வெடித்து உடல் கருகி இறந்துவிட்டார். தொழிலதிபர் குடும்பத்துக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருந்ததால் 14 வயது அஸ்வின் என்ன செய்வது என தவித்துக்கொண்டிருந்தான்.

இதுதான் சமயம் என்று நண்பர் லட்சுமணன் அங்கு புகுந்தார். அவர், சிறுவனிடம், அப்பா சாகும்போது என் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி சென்றார். தம்பி நீ கவலைப்படாதே நான் உன்னை வளர்த்து பெரிய ஆளாக்குகிறேன். இனி நாம் இங்கு இருக்கவேண்டாம் கோவையில் எனக்கு தெரிந்தவர்கள் உள்ளனர். அங்கு உன்னை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மையென நம்பிய அஸ்வின் அவருடன் கோவை சென்றுவிட்டான். ஊரில் சிறுவனை காணாது சுரேஷ்குமார் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேடியும் கிடைக்கவில்லை. நீண்ட நாளுக்கு பின் சிறுவன் கோவையில் லட்சுமணன் பிடியில் இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் செய்துங்கநல்லூரில் உள்ள 2வது தாய்மாமன் ராஜன் செல்லப்பாவிடம் விவரத்தை கூறி, உன் மருமகனை உடனே மீட்டு வா. இல்லை என்றால் அந்த ஆள் சீரழித்துவிடுவான் என கூறினர்.

இதற்கிடையில் கோவைக்கு கொண்டு செல்லப்பட்ட அஸ்வினுக்கு போதை பொருட்கள் கொடுத்து அவனை பைத்தியக்காரனாக்கி இருக்கிறார்கள். போதை பழக்கத்தில் இருந்து சிறுவன் மீளமுடியாத நிலைக்கு வந்துள்ளான். தாய்மாமன் ராஜன் செல்லப்பாவும் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு செய்தார். இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவன் அஸ்வின் மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று முன்தினம் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டான். போலீசார் சிறுவனுக்கு மனநல ஆலோசனை கொடுத்து நெல்லையில் உள்ள குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைக்கும் படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்போது சிறுவன் குழந்தைகள் காப்பகத்தில் உள்ளான். ஒரு கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைக்கு நேர்ந்த கதி பெரும் பரபரப்பையும், கண்ணீரையும் வரவழைத்து உள்ளது.

கோர்ட்டின் அதிரடியால் காப்பாற்றப்பட்ட சிறுவன்
சிறுவன் கடத்தப்பட்டு, மீட்கப்பட்டது தொடர்பாக நடந்த விசாரணையில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த அதிரடி உத்தரவு: சிறுவனை கெட்ட பழக்க வழக்கங்களுக்கு லட்சுமணன் என்பவர் அடிமைப்படுத்தி உள்ளார். குழந்தைகள் காப்பத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை நாள்தோறும் இருமுறை போலீசார் சென்று பார்த்து வரவேண்டும். சிறுவனை லட்சுமணன், அவரது நண்பர்கள், உறவினர்கள் யாரும் சந்திக்க அனுமதிக்க கூடாது. மேலும் சிறுவனை காப்பகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. சிறுவன் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு பவர் பத்திரம் பதிவு செய்ததை சம்பந்தபட்ட சார்-பதிவாளர் ரத்து செய்யவேண்டும்.

சிறுவனுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதை பாளை போலீஸ் உதவி கமிஷனர் உறுதிபடுத்தவேண்டும். அந்த சொத்துக்களில் சட்ட விரோதமாக குடியிருப்போரை வெளியேற்றி சாவியை போலீஸ் உதவி கமிஷனரே வைத்திருக்கவேண்டும். அடுத்த மாதம் 15ம்தேதி சிறுவனுடன் போலீஸ் உதவி கமிஷனரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மனநிலை மாறவில்லை
சிறுவனை கும்பலிடம் இருந்து மீட்டபோதிலும் இன்னும் அவன் மனநிலை மாறவில்லை. நீதிபதிகளிடம் அஸ்வின், நான் அவரை விட்டு போகமாட்டேன். லட்சுமணனிடம்தான் இருப்பேன். பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. அவருடன் அனுப்பாவிட்டால் நான் தற்கொலை செய்வேன் என அடம் பிடித்தான். சிறுவனை மனதளவில் எந்த அளவிற்கு கெடுத்து இருக்கிறார்கள் என தீர்ப்பளித்த நீதிபதிகள் அதை சுட்டிக்காட்டியதோடு, வேதனைப்பட்டனர்.

எல்லாம் சொத்துபடுத்திய பாடு
தொழிலதிபர் சுரேஷ்குமார், அவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஆல்வின் ஆகியோர் அடுத்தடுத்து இறந்துவிட்டதால் கடைசியில் அவர்கள் குடும்பத்தில் சிறுவன் அஸ்வின் மட்டும் மிஞ்சினான். இவர்களுக்கு ஏகப்பட்ட சொத்து இருந்ததால் அவற்றை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நண்பர் லட்சுமணன் அங்கு சென்று, சிறுவனை ஆசை வார்த்தையால் மயக்கி அவனை போதைக்கு அடிமையாக்கி இருக்கிறார். அதோடு போலி ஆவணம் மூலம் சொத்துக்கள் அனைத்தையும் கைவசப்படுத்தி உள்ளனர். இதற்காக மைனரான அஸ்வினை மேஜர் என போலியாக ஆதார் அட்டை தயாரித்து ஏமாற்றி இருக்கிறார்கள். இவற்றை பாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இப்போது அந்த சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : paddy entrepreneur ,student , Paddy, drug addict, student
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...