ஆரல்வாய்மொழி: கன்னியாகுமரி மற்றும் ஆரல்வாய்மொழியில் அடைமழை கொட்டியது. இதனால் சமத்துவபுரத்தில் உள்ள சுமார் 100 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பொது மக்கள் இரவு சாலையில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் பொய்ைக அணை செல்லும் சாலையில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு சுமார் 100 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கழிவு நீரோடை சேதமடைந்தது. இதனால் கழிவு நீர் பாய்ந்து செல்லாமல் தேங்கியது. இந்த நிலையில் நேற்று கன மழை பெய்தது. மழை தண்ணீர் கழிவு நீருடன் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது.
வீட்டிற்குள் தண்ணீர் தேங்கியதால் இங்கு வசிக்கும் மக்களால் வீட்டில் இருக்க முடியவில்லை. நள்ளிரவு என்பதால் எங்கு செல்வது என்று தெரியாமல் சாலையில் அமர்ந்து இருந்தனர். பின்னர் அங்கு திரண்ட பொது மக்கள் கால்வாய் அடைப்பை வெட்டிவிட்டு தண்ணீர் பாய்ந்தோட செய்தனர். இதனால் தற்காலிகமாக தண்ணீர் வெளியேறிது. இருப்பினும் மழை காரணமாக தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில் உள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேறவில்லை. இது குறித்து தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர் சாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சம்பவ இடத்ததுக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
பின்னர் இன்று கால்வாய் அடைப்பை முழுமையாக சரி செய்யும் பணியை தொடங்குவதாக கூறினார். இதையடுத்து பொது மக்கள் சமாதானமடைந்தனர். இதேபோல் கன்னியாகுமரியிலும் நல்ல மழை பெய்தது. இதனால் காலாண்டு விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள் லாட்ஜூகளிலேயே முடங்கி உள்ளனர். சூரிய உதயத்தை காண கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. மழை மேகம் சூழ்ந்ததால் இன்று காலை சூரிய உதயம் தெரியவில்லை. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கடற்கரை சாலை, சன்னதி தெரு, திரிவேணி சங்கமம் கடற்கரை போன்ற இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கூட்டம் குறைவு மற்றும் மழை காரணமாக கடற்கரையில் உள்ள தற்காலிக கடைகளும் திறக்கப்படவில்லை. சன்னதி தெரு, கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி இருந்தது.