×

ஹெல்த் மியூசியம்!

நன்றி குங்குமம்

ஒரு நீண்ட கனவுக்குள் நுழைந்து வெளியே வந்த மாதிரியான ஓர் அனுபவத்தைத் தருகிறது நேஷனல் மியூசியம் ஆஃப் ஹெல்த் அண்ட் மெடிசின்.
அமெரிக்க இராணுவத்தில் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிந்த வில்லியம் ஹேமண்டால் 1862ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த மியூசியம். மேரிலாண்டில் வீற்றிருக்கும் இதை 2011ல் புதுப்பித்து நவீனப்படுத்தியுள்ளனர்.‘‘மனித உடலைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், மன தைரியம் இருப்பவர்கள் மட்டுமே உள்ளே வாருங்கள். முக்கியமாக எதையும் சாப்பிடாமல் வாருங்கள்...’’ என்று அழைப்பு விடுக்கிறது இந்த ஹெல்த் மியூசியம். சுமார் 2.5 கோடி கலைப்பொருட்கள் மியூசியத்தை அலங்கரிக்கின்றன. அத்தனையும் பொது மருத்துவம் மற்றும் இராணுவ மருத்துவம் சார்ந்தவை. இதில் 5 ஆயிரம் மனித எலும்புக்கூடுகளும், 8 ஆயிரம் பாதுகாக்கப்பட்ட உடல் உறுப்புகளும் அடங்கும். தவிர, 12 ஆயிரம் மருத்துவ உபகரணங்களும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்கள் மருத்துவத்தின் ஆதிகாலம் தொட்டு இருப்பவை. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை, ஆபிரகாம் லிங்கனின் மீது பாய்ந்த குண்டு, முதல் உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் உடல் உறுப்புகள், ‘நாசா’ விண்வெளிக்கு அனுப்பிய குரங்கின் எலும்புக் கூடு... உட்பட ஏராளமான அரிய விஷயங்களைச் சேகரித்துப் பதப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனர்.

இதையெல்லாம் பார்ப்பதால் என்ன நடக்கப்போகிறது?

‘‘போரில் மரணித்த சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகளைப் பார்க்கிறபோது மக்களுக்கு போரின் மீது தீராத வெறுப்பு உண்டாகும். அதற்காகவே அதையும் காட்சிக்கு வைத்துள்ளோம்...’’ என்கிறார் மியூசியத்தில் இருக்கும் வழிகாட்டி. மனித மூளைகள் மட்டுமே ஆயிரக்கணக்கான கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதன் முதலாக மன நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மூளையும் இங்குதான் உள்ளது. இவையெல்லாமே நரம்பியல் மருத்துவம் படிப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறதாம். வருடத்துக்கு 40 முதல் 50 ஆயிரம் பார்வையாளர்கள் விசிட் அடிக்கின்றனர். மருத்துவம் சார்ந்த பயனுள்ள நிகழ்வுகள் வாரம்தோறும் இங்கு அரங்கேறுகின்றன.


Tags : Health Museum , Health, Museum, Human Body, Medicine
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்