×

ஏற்காட்டில் தொடர் மழை: அடிவார கிராமங்களின் நீர்நிலைகளில் புதுவெள்ளம்

சேலம்: ஏற்காட்டில் பெய்யும் தொடர் மழையால், அடிவாரத்தில் உள்ள கற்பகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகளை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில், ெதாடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. இதை ஏற்காட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் வழிந்தோடும் மழைநீர், அடிவாரத்தில் உள்ள மன்னார்பாளையம் கற்பகம் கிராமத்திற்கு வருகிறது. இங்குள்ள சுற்றுப்புற கிராமங்களின்  நீர்வழித்தடத்தில், புது வெள்ளமாய் பாய்ந்து ஓடுகிறது. இதை காண பலர் குடும்பத்துடன் வருகின்றனர். மேலும், அங்குள்ள தடுப்பணையில் சிறுவர்கள் உற்சாக குளியல் போடுகின்றனர். இங்கு வழிந்தோடும் மழைநீர், புதுஏரிக்கும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் புது ஏரி நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு மழை பெய்யாததால், கற்பகம் கிராமத்தில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை. தற்போது, ஏற்காட்டில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, கற்பகம் சுற்றுப்புற கிராமங்களில், சில நாட்களாக புது வெள்ளம் பாய்ந்து வருகிறது. பளிங்கு போல் ஓடும் தண்ணீரில், சிறுவர்கள் உற்சாக குளியல் ேபாட்டு மகிழ்கின்றனர். புது ஏரி நீர்வழித்தடத்தில் மழைநீர் ஓடுவதால், இப்பகுதிகளில் உள்ள கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்தால் புதுஏரி விரைவில் நிரம்பும். அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் மூலம், மூக்கனேரியும் நிரம்பும். மழை காரணமாக, கன்னங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் பாக்கு, தென்னை, பூச்செடிகள், தோட்டப்பயிர்கள், நெல், கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் நல்லமுறையில் வளர்ந்துள்ளன. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags : Yercaud ,Tidal Villages Rain ,Salem , Rain, Salem
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து