×

ஆந்திர மாநிலத்தில் 100 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல்

திருமலை: மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டை போக்குவதற்காக கர்னூல் சந்தையில் இருந்து 100 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஆந்திர மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கடும் மழையின் காரணமாக  விவசாயிகள் பயிரிட்ட வெங்காயங்கள் மழைநீரில் சேதம் அடைந்ததால் விளைச்சலும் குறைந்தது. இதன் காரணமாக ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெங்காயம் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. தகவலறிந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் பதுக்கி வைத்திருந்த வெங்காயத்தை நேற்று பறிமுதல் செய்துள்ளனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநில அரசு கர்னூல் விவசாய மார்க்கெட்டிலிருந்து 100 மெட்ரிக் டன் வெங்காயத்தை நேற்று கொள்முதல் செய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரைத்து பஜாரில் (உழவர் சந்தையில்) பொதுமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு  அரசே விற்பனை செய்ய உள்ளது. இதுதவிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டை போக்கும் விதமாக நாசிக்கில் இருந்து மேலும் 300 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மொத்தம் 900 மெட்ரிக் டன் தேவை என்றும், அவற்றை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Onion, Purchase
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி