×

முத்துப்பேட்டை பகுதியில் ஒரே நாளில் 50,000 பனை விதைகள் விதைப்பு

முத்துப்பேட்டை: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை பகுதியில் தன்னார்வலர்களின் முயற்சியால் ஒரே நாளில் 50,000 பனை விதைகள் நட்டு சாதனை படைத்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி வீசிய கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. இதில் தென்னை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து சேதமானது. இதனால் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் மரங்கள் முறிந்து விழுந்ததால் புவிவெப்பம் அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாவி வருகின்றனர். வெயில் தாக்கத்தால் பகல் நேரம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் குளங்கள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு மரத்தின் அருமையையும், நீரின் அவசியத்தையும் உணர வைத்தது. இதையடுத்து முத்துப்பேட்டை பகுதி முழுவதும் அரசுக்கு ஆதரவாக தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் ஆகியன மண்வெட்டி, கம்பிபாரைகளுடன் களமிறங்கி மரக்கன்றுகளை நடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

தொடர்ந்து பள்ளி மாணவர்களின் உதவியோடு முத்துப்பேட்டை முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள் முயற்சியில் முத்துப்பேட்டை அடுத்த கரையங்காடு, கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு உள்ளிட்ட கடலோர கிராம பகுதிகளிலும் மரக்கன்றுகள் முழுவீச்சில் நடப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வகையிலும் பயன்தரும் பனை மரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில், அதன் விதைகள் சேகரிக்கபட்டு நடப்பட்டு வருகின்றன.இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த கரையங்காடு, கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, புதுக்குடி மற்றும் முத்துப்பேட்டை எல்லையை ஒட்டியுள்ள நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினம், வண்டுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் மட்டும் நேற்றுமுன்தினம் தொண்டியக்காடு, புதுக்குடி, துளசியாப்பட்டினம், ராஜன்கட்டளை, பிச்சைக்கட்டளை பகுதி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் உதவியுடன், சுமார் 50ஆயிரம் பனை விதைகளை நட்டு தன்னார்வலர்கள் சாதனை படைத்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இயற்கை குறித்தும் பனைமரத்தின் அவசியம் குறித்தும் தன்னார்வர்களால் கருத்தரங்கமும் நடைபெற்றது.இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ராஜ்குமார்கூறுகையில், விடுமுறை நாளில் இப்பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர். இதற்காக 52ஆயிரம் பனைவிதைகள் சேகரிக்கப்பட்டன. சமுதாய அக்கறைக்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்களிப்புடன் பனைவிதைகள் நடப்பட்டுள்ளது. விரைவில் எங்கள் பகுதி பசுமை போர்த்தி காண இருக்கிறது என்று கூறினார்.

Tags : area ,Muthupettai , Muthupettai, palm seeds
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...