×

தாழ்வாக பறந்துவரும் ஆளில்லா குட்டி விமானங்கள் போன்ற சாதனங்களை கண்டுபிடிக்கும் திறன் தங்களுக்கு கிடையாது: இந்திய எல்லை பாதுகாப்புப் படை

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தையொட்டிய எல்லைப் பகுதிக்குள் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை பாகிஸ்தான் வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், வானில் மிகவும் தாழ்வாக பறக்கும் சாதனங்களை கண்டுபிடிக்கும் திறன் தங்களுக்கு கிடையாது என்று இந்திய எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பஞ்சாப்புக்குள், தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆயுதங்களை வீசியதாக திடுக்கிடும் தகவலை அம்மாநில அரசு வெளியிட்டது. 8 முறை அதுபோல் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் வீசப்பட்டிருப்பதாகவும், ஜம்மு காஷ்மீரில் பிரச்னையை ஏற்படுத்த அவற்றை தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்று பஞ்சாப் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டதை ஏன் கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும்படி அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிஎஸ்எஃப் எனப்படும் இந்திய எல்லை பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி ஒருவர், மிகவும் தாழ்வாக பறந்துவரும் ஆளில்லா குட்டி விமானங்கள் போன்ற சாதனங்களை கண்டுபிடிக்கும் திறன் தங்களுக்கு கிடையாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. எல்லை பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி விவேக் ஜோஹ்ரி, பஞ்சாப்புக்கு இன்று சென்று ஆய்வு செய்து, உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்டிஆர்ஓ எனப்படும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பும், ஆளில்லா விமானங்கள் ஆயுதங்களை வீசிய நேரத்தில், எத்தனை செல்போன் எண்கள் அப்பகுதியில் உபயோகத்தில் இருந்தன என்று ஆய்வு செய்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் அறிக்கை அளிக்கவுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட விசாரணை இருக்கும் என கூறப்படுகிறது.


Tags : Indian ,border security force , do not ,capability,detect devices ,low-flying drones,Indian Border Security Force
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்