×

15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: வேலை வாய்ப்புகளை தமிழகத்தில் உருவாக்கும் விதமாக 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்தில், 2015-ம் ஆண்டு மறைந்த  முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது, 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. அதில் போடப்பட்ட புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தொழில் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அதில்,  புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இந்த 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மேற்கொள்ளபட்ட ஒப்பந்தங்கள்  அடிப்படையில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிய தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கையெழுத்தானது. சுமார் ரூ.7,175.71 கோடி இதன் மூலம் முதலீடு கிடைக்கும் என்றும் தொழில்துறை மூலம் 45,846 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்னும், சற்று நேரத்தில், டிசிஎஸ், இன்போசிஸ், ஜப்பானின் நிசி, கொரியாவின் யங்வா ஆகிய நிறுவனங்களின்  புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லினை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நாட்டுகிறார்.

Tags : Edappadi Palanisamy ,Memorandum of Understanding ,MOU ,Edappadi , Memorandum of Understanding (MOU) with Chief Minister Edappadi Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்