×

வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் வைக்கோல் பெட்டி முறையில் உணவு தயாரித்த மாணவர்கள்

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் வைக்கோல் பெட்டி முறையில் உணவு தயாரித்து மாணவர்கள் அசத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அன்புவினோத், ஆகாஷ். இவர்கள் இருவரும் ஆசிரியர் கார்த்திகேயன் வழிகாட்டுதலோடு வைக்கோல் பெட்டி அடுப்பை தயார் செய்துள்ளனர். மாணவர்கள் இருவரும் மரப்பெட்டியினை உண்டு செய்து அதனை வைக்கோலை கொண்டு நிரப்பி எரிபொருளை சிக்கனப்படுத்தி சத்து குறையாத உணவுகளை தயார் செய்யும் முறையை கண்டு பிடித்துள்ளனர். இதன்மூலம் 30 நாள் பயன்பாட்டிற்கு வரும் காஸ் 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

தேவையான அளவு மரப்பெட்டி ஒன்று தயார் செய்து அதில் துண்டுதுண்டாக வைக்கோலை வைத்து நிரப்பி அதன் நடுவே பாத்திரம் வைக்கும் அளவிற்கு இடைவெளி வைத்து வைக்கோலை வைக்க வேண்டும். தற்போது சமைக்க பயன்படும் அரிசியை 1:2 என்ற வகிதத்தில் அரிசியும் நீரையும் எடுத்து அதை கேஸ் அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் பாத்திரத்துடன் அப்படியே எடுத்து வைக்கோல் பெட்டியில் வைத்து வெப்பம் வெளிவராத நிலையில் மூடவேண்டும். 30 நிமிடம் கழித்து பார்த்தால் சாதம் நன்றாக வெந்திருக்கும். இந்த சாதத்தை நாம் வடிக்க வேண்டியதில்லை. இதனால் சத்து கூடுதலாக கிடைக்கிறது.

இதேபோல் காய்கறிகளையும் அவித்து கொள்ளலாம். இந்த பெட்டியில் உள்ள வைக்கோல் பாத்திரத்தின் வெப்பத்தை அப்படியே நிலைக்க செய்கிறது. மரப்பலகையானது வெப்பத்தை வெளியே விடாமல் பாதுகாக்கிறது. இப்பெட்டியில் 8 மணிநேரம் வரை வெப்பம் நிலைத்து இருக்கும். இதனால் இந்த பெட்டியில் உணவு பொருட்களை சூடு குறையாமல் 8 மணிநேரம் பாதுகாக்கலாம். இந்த வைக்கோல் பெட்டியில் சமையல் செய்யும்போது நேரமும், எரிபொருளும் மிச்சமாகிறது. ஆவியில் காய்கறிகளை வேகவைக்கும் போது சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கப்பட்டு சத்தான காய்கறிகளை நமக்கு கிடைக்கிறது. இந்த வைக்கோல் பெட்டி அடுப்பு கண்டுபிடிப்பு தஞ்சையில் உணவு உற்பத்தி கழகத்தின் சார்பில் நடைபெற்ற அகில இந்திய அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் பரிசினை பெற்றுள்ளது.பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Vedaranyam ,field , Vedaranyam, students
× RELATED கோடை மழை 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு