×

சுடுகாட்டு பாதைக்கு வழியில்லாததால் விளைநிலத்தை கடந்து சடலம் எடுத்துச்செல்லும் அவலம்

கலசபாக்கம்: துரிஞ்சாபுரம் அருகே சுடுகாட்டு பாதைக்கு வழியில்லாததால் கடந்த 50 ஆண்டுகளாக விளைநிலத்தை கடந்து சடலத்தை எடுத்துச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நாயுடுமங்கலம் ஊராட்சி மதுரா அகரம் சிம்பந்தி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாதை வசதி இல்லாமல் குறுகலாக உள்ளது.

இப்பகுதியில் உள்ள நிலத்தின் உரிமையாளர்களிடம் பேசி பாதயை அகலப்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு கோவை தங்கம் தலைமையில் சட்டமன்ற குழுவினர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்த போது, அப்போதைய ஊராட்சி உறுப்பினர் ராஜாமணி சுடுகாட்டுப்பாதையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். தனி தாசில்தாரிடம் கூறி ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

ஆனால் 2011 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2006-2011 வரை திமுக ஆட்சியில் இருந்த போது அனைத்து கிராமிய அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் எரிமேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுடுகாட்டு சாலை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இறுதி சடங்கு ஊர்வலத்தின் சடலத்தை விளைநிலத்தை கடந்து எடுத்துச்செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.  எனவே, இப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் குறுகலாக உள்ள மயானபாதையை அகலப்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : land , Fireplace, path
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!