×

திகார் சிறையில் இருக்கும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் காங். மூத்த தலைவர் அகமது படேல் சந்திப்பு

டெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சந்தித்துள்ளார். டி.கே.சிவக்குமாரை காண காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால் மற்றும் டி.கே. சுரேஷ் ஆகியோர் சென்றுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக செயல்பட்ட டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் ஆஜரானார். அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த 3-ம் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது இவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டி.கே.சிவகுமாருக்கு ஜாமின் வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை சில முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.

எனவே, வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் இருப்பதால், டி.கே.சிவகுமாரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று டெல்லி திகார் ஜெயிலில் உள்ள அமைச்சர் டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  அகமது படேல் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர். கடந்த வாரம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாஜக அரசாங்கம் அரசியல் நோக்கத்துடனேயே காங்கிரஸ் கட்சியின் இரு மூத்த தலைவர்களை சிறையில் அடைந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது.

Tags : DK Sivakumar ,Ahmed Patel ,Karnataka ,Tihar jail ,Senior Leader ,Meeting , திகார் சிறை,டெல்லி,டி.கே.சிவகுமார்,காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சந்திப்பு
× RELATED கர்நாடக துணை முதலமைச்சர்...