×

திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு நவராத்திரி பவனிக்காக அழைத்துவரப்பட்ட யானைகள் தடுக்கப்பட்டது ஏன்?

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பவனி புறப்படுகின்ற நிலையில் இதற்காக கொண்டுவரப்பட்ட இரண்டு யானைகளை கேரள எல்லையில் தடுத்து நிறுத்தியதின் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரத்தில் நடைபெறுகின்ற நவராத்திரி விழாவிற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இதில் சரஸ்வதி தேவியை யானை மீது பவனியாக கொண்டு செல்வர். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் விக்ரங்கள் பல்லக்கில் கொண்டு செல்லப்படும். திருவனந்தபுரம் சென்ற பின்னர் வேளிமலை முருகன் வெள்ளிக்குதிரை மீது எடுத்து செல்லப்படுவார். இந்த ஆண்டு இன்று (26ம் தேதி) பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி பவனி தொடங்குகிறது. இதற்காக இரண்டு யானைகள் நேற்று திருவனந்தபுரத்தில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டபோது அதனை கேரள வனத்துறையினர் குமரி - கேரள எல்லையில் திடீரென தடுத்து நிறுத்தினர்.

மலையின்கீழ் ஸ்ரீவல்லபன், ஸ்ரீகண்டேஸ்வரம் சிவகுமார் ஆகிய யானைகள் தடுக்கப்பட்டன. பின்னர் பாறசாலை மகாதேவர் கோயில் வளாகத்தில் யானைகள் கட்டி வைக்கப்பட்டன. இதில் ஸ்ரீவல்லபன் யானை முதல்நாள் இரவே பாறசாலை வந்து சேர்ந்தது. சிவகுமார் நேற்று முன்தினம் காலை கொண்டுவரப்பட்டிருந்தது. நாட்டு யானைகள் பரமாரிப்பு சட்டத்தின் அடிப்படையில் யானைகளை மாநில எல்லைகளை கடந்து கொண்டு செல்வதில் கேரள தேவசம் போர்டு அதிகாரிகள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாமல் இருந்தது குழப்பத்திற்கு காரணம் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேவசம் போர்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். பிரச்னை விஸ்வரூபமடைந்த நிலையில் உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில் யானைகள் மாலையில் விடுவிக்கப்பட்டன. பின்னர் யானைகள் நேற்று முன்தினம் இரவு குமரிமாவட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் முன்கூட்டியே பத்மநாபபுரம் அரண்மனை வந்து இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் யானைகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. யானைகள் தடுக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று காலை பாறசாலை குறுங்கட்டி பகுதியில் உள்ள கேரள சோதனை சாவடியில் யானைகளை அழைத்து வந்தவர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களில், பிற மாநிலங்களுக்கு யானைகளை கொண்டு செல்வதற்கு வனத்துறை தலைமை பாதுகாவலர் வழங்க வேண்டிய அனுமதி கடிதம் இல்லை. இதுவே யானைகளை அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் ஆகும்.

நவராத்திரி பவனிக்கு மூன்று யானைகளை கொண்டு செல்ல தேவசம் போர்டு அதிகாரிகள் வனத்துறை தலைமை பாதுகாவலருக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இணைத்து விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்று கேட்டு அந்த விண்ணப்பத்தை அப்போது வனத்துறை திருப்பி அனுப்பியது. ஆனால் இதில் தொடர் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் அனுமதி பெறாமலேயே யானைகளுடன் பவனிக்காக புறப்பட்டது குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. உயர் அதிகாரிகளின் தலையீட்டில் யானைகள் பத்மநாபபுரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் மீண்டும் குமரி மாவட்ட வனத்துறையும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

யானைகள் இல்லாத குமரி அறநிலையத்துறை

குமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக காளி, இந்திரன், ராஜன், கணேசன், கோபாலன் என 5 யானைகள் இருந்தன. இதில் 60 வயதான கோபாலன் யானையை தவிர மற்ற யானைகள் அனைத்தும் ஏற்கனவே வயது முதிர்வு காரணமாக இறந்தன. கோபாலன் யானை குமரி மாவட்ட பக்தர்கள் மனதில் இடம் பெற்றதோடு, கோயில் விழாக்களிலும் வலம் வந்து கொண்டிருந்தது. யானையை குழித்துறை மகாதேவர் கோயில் அருகே உள்ள தோப்பில் கட்டி வைத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு மலக்கட்டு நோயால் அவதிப்பட்டு பின்னர் இறந்தது. கோபாலன் யானை இறந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. இதனால் ஐந்து யானைகளை பராமரித்து வந்த குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒரு யானை கூட இல்லை. புதியதாக யானையை வாங்குவதற்கும் அறநிலையத்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறை கோயில்களில் நடக்கின்ற விழாக்களுக்கும் யானைகளை தனியாரிடம் இருந்து வாடகைக்கு பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அளப்பன்கோடு, ஆரல்வாய்மொழியில் தடுத்த குமரி வனத்துறை

குழித்துறை அருகே அளப்பன்கோடு ஈஸ்வரகால பூதத்தான் கோயிலில் 10க்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். கடந்தமுறை நடைபெற்ற யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்ற கொல்லம் பகுதிகளை சேர்ந்த மூன்று யானைகளை ஊர்வலம் முடிந்த நிலையில் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் கடைசி நேரத்தில் செறியகொல்லை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்திருந்தனர். குமரி மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெறாமல் இந்த யானைகள் ஊர்வலத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கூறி அப்போது பறிமுதல் செய்யப்பட்டன. இந்த யானைகள் பின்னர் கேரள வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பான வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆரல்வாய்மொழி, ஆலமூடு இசக்கி அம்மன் கோயில் பால்குட ஊர்வலத்தில் வழக்கமாக யானைகளும் ஊர்வலமாக வரும். கடந்த முறை 9 யானைகள் அழைத்து வர இருந்தனர். ஆனால் வனத்துறை சார்பில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்கனவே கஜ பூஜைக்கு யானைகள் கொண்டு வர தடையால் பக்தர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். யானைகள் ஊர்வலத்துக்கு, யானை உரிமையாளர் முன் கூட்டியே வனத்துறையிடம் யானையின் மருத்துவ சான்றிதழ்கள், உடல் தகுதி சான்றிதழை சமர்பித்து சென்னையில் உள்ள வன தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். மாவட்டத்தில் உள்ள வன அலுவலகம் இதில் எதுவும் செய்ய முடியாது என்று கூறி யானை ஊர்வலத்துக்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

Tags : district ,Kumari ,Thiruvananthapuram ,burial ,Nagercoil , In Nagercoil, elephants
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...