×

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவாகரம்: பெங்களூரு முன்னாள் காவல்துறை ஆணையர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

பெங்களூரு: தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக பெங்களூருவில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு முன்னாள் காவல்துறை ஆணையர் அலோக்குமார் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்தார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.

இந்த நிலையில் குமாரசாமி ஆட்சியின் போது மஜத மாநிலத் தலைவராக இருந்த எச்.விஸ்வநாத், அண்மையில் அளித்திருந்த பேட்டியில், கூட்டணி ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தனது கட்டுப்பாட்டில் இருந்த உளவுத் துறை மூலம் தலைவர்களின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்காக, அவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா உள்ளிட்ட  பலர் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, தொலைபேசி ஒட்டு கேட்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தற்போதைய முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவு மற்றும் கர்நாடக அரசின் வேண்டுகோளுக்கேற்ப வழக்கு பதிவு செய்துள்ளதாக, சி.பி.ஐ.- யும் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, தொலைபேசி ஒட்டுக்கேட்பில் நான் ஈடுபடவில்லை. சிபிஐ விசாரணை அல்லது வேறு ஏதாவது சர்வதேச விசாரணை போன்ற எந்த விசாரணையை வேண்டுமானாலும் நடத்தட்டும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பெங்களூரு முன்னாள் காவல்துறை ஆணையர் அலோக்குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தற்போது கர்நாடக மாநில ரிசர்வ் போலீசில் ஏ.டி.ஜி.பி.-யாக உள்ளார். தற்போது, சோதனை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகள் குழு அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

Tags : Alok Kumar ,action raids ,CBI ,Bangalore ,home ,raids , Telephone Patching, Bangalore, Former Police Commissioner, Alok Kumar, CBI, Trial
× RELATED செல்போன் அழைப்புகள் ஒட்டு கேட்பு...