×

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு போலீசார் சம்மன்

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). இவர், கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை-துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கிமீ தூரத்துக்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது.

இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். அப்போது கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி, கீழே விழுந்த சுபஸ்ரீ மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சுபஸ்ரீ இறந்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் விபத்துக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த பேனரை வைத்த ஜெயகோபால் மீது 308 பிரிவின் கீழ் பரங்கிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால், சுபஸ்ரீ இறந்து 14 நாட்கள் ஆகியும் பேனரை வைத்த ஜெயகோபால் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து பேசிய காவல்துறையினர், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டிருந்தோம். இது தொடர்பான ஆணையை அவரது வீட்டிற்கு வெளியில் ஓட்டியுள்ளோம். ஜெயகோபாலின் ஜெயகோபாலின் மனைவி, மகன், மருமகள், உறவினர்கள் என அனைவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது வீட்டில் யாரும் இல்லாததால் ஆணையை வீட்டிற்கு வெளியில் ஓட்டியுள்ளோம்.

ஜெயகோபால் தலைமறைவாக உள்ளார் என்று அறிவிக்க நிறைய சட்ட விதிமுறைகள் உள்ளன. ஏனென்றால் இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு அவரைத் தேட எங்களிடம் உள்ள அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்த வேண்டும். மேலும் ஜெயகோபால் நடமாட்டத்தை சிசிடிவி மூலம் சிறப்பு படை காவல்துறையினர் கண்கானித்து வருகின்றனர். ஜெயகோபாலின் கைப்பேசி கடந்த 13ம் தேதி முதல் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவரது நெருங்கிய உறவினர்கள் 12 பேரின் கைப்பேசியை நாங்கள் கண்கானித்து வருகிறோம். அவர்களின் கைப்பேசி சிக்னர் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலேயே உள்ளது, எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : Subasree ,Jayagopal ,Chennai Subasree ,AIADMK , Chennai, Banner, Subhasree, Adhikam, Jayagopal, summon
× RELATED மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி...