×

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த விவகாரம் திருப்பதி மலையடிவாரத்தில் தந்தையுடன் உதித்சூர்யா கைது : ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர் உதித்சூர்யாவையும், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனையும் சிபிசிஐடி போலீசார் திருப்பதி மலையடிவாரத்தில் நேற்று காலை கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஆண்டிபட்டி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (19). இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி இதுபற்றி மெயிலில் புகார் வந்தது. இதன் பின்பே தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவினர் நடத்திய விசாரணையில் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகம், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு புகார் செய்தார். பின்னர் தேனி க.விலக்கு போலீசாரிடமும் புகார் செய்தார். இதனிடையே உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானார்.

இந்த வழக்கை முதலில் தேனி போலீசார் விசாரித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதி மலையடிவாரத்தில் தனது பெற்றோருடன் தங்கியிருந்த  மாணவர் உதித்சூர்யாவை நேற்று காலை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி கோர்ட்டில் உதித்சூர்யாவையும், அவரது தந்தையையும்  இன்று காலை 10 மணிக்கு ஆஜர்படுத்த உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி காட்வின், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோரும், மதுரையில் இருந்து வந்த தனி போலீஸ் குழுவினரும் நேற்று இரவு தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவது தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணிகளை தொடங்கினர். இன்று காலை உதித்சூர்யாவையும், அவரது தந்தை வெங்கடேசனையும் ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்யவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தேனி எஸ்பி பேட்டி


இந்த விவகாரம் குறித்து தேனி எஸ்பி பாஸ்கரனிடம் கேட்டபோது, ‘உதித்சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் திருப்பதி மலையடிவாரத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தேனிக்கு புறப்பட்டு விட்டனர். நாளை (இன்று) காலை ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த வழக்ைக  சிபிசிஐடி போலீசார் கையாள்வதால் எங்கள் பங்கு தற்போது குறைந்து விட்டது’’ என்றார்.

Tags : Udithsuriya ,mountain bungalow ,Tirupati ,Antipatti Court , Udithsuriya arrested, father at Tirupathi hills ,Antipatti Court today
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!