×

நேர்காணலில் 3 பேர் கொண்ட பட்டியல் தயார் நாங்குநேரி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தீவிரம் : ஊர்வசி அமிர்தராஜிக்கு வாய்ப்பு

சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்வதில் கட்சி தலைமை தீவிரமாகியுள்ளது. நேர்காணலில் 3 பேர் கொண்ட பட்டியலை கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம்தேதி நடக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார். எனவே நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனால் நாங்குநேரி தொகுதியில் காங்கிரசை எதிர்த்து அதிமுக பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஆளுங்கட்சியை எதிர்த்து காங்கிரஸ் களம் இறங்குவதால் வலுவான வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதை கருத்தில் கொண்டு கட்சி தலைமை, வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக வேட்பாளரை அறிவித்துவிட்டது. அதேபோன்று அதிமுகவும் இரு தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டது. எந்த தேர்தலாக இருந்தாலும் கோஷ்டி பூசல்களுக்கு இடையில் கடைசியாக வேட்பாளரை அறிவிக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி இப்போது உடனடியாக வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, கடந்த 3 நாட்களாக விருப்ப மனுக்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் வழங்கப்பட்டது. இதுவரை விருப்ப மனுக்களை பெற்றவர்களில், 21 பேர் உரிய கட்டணத்துடன் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தனர். அவர்களிடம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். மனுதாக்கல் செய்த அனைவரிடமும் நேர்காணல் முடிந்ததை தொடர்ந்து, இறுதியாக 3 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்தனர். இந்த பட்டியலுடன் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி செல்கிறார்.  

அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், 3 பேர் கொண்ட பட்டியலை ஒப்படைக்கிறார். அதில் ஒருவரை சோனியாகாந்தி இறுதி செய்து, வரும் 27ம் தேதி அறிவிக்கிறார். வேட்பாளர் தேர்வில் மூத்த தலைவர் குமரிஅனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதில் ஊர்வசி அமிர்தராஜ், வேட்பாளர் தேர்வில் முதலிடத்தில் இருப்பதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,candidate Nominee candidate ,Nangu Neri ,election , Congress intensifies selection ,nominee candidate
× RELATED காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்