×

துபாயில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 23 ஏர்கன் ரக துப்பாக்கிகள் விமான நிலையத்தில் சிக்கின: இளையான்குடியைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை

அவனியாபுரம்: துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் 23 ஏர்கன் துப்பாக்கிகளை கடத்தி வந்த 3 பேரை பிடித்து  அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.  துபாயில் இருந்து மதுரைக்கு கடந்த 22ம் தேதி தனியார் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த சிராஜம் முனீர் (33),  முகமது ஹயூம் (28), இஜாஸ் அகமத் (24)  ஆகிய மூவரும் பாதுகாப்பு கருவியை தாண்டும்போது, சந்தேகத்திற்குரிய பொருள் வைத்திருப்பதாக அபாய ஒலி எழுப்பியது.

 இதைத்தொடர்ந்து மூவரது உடமைகளையும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இவர்களது பெட்டிக்குள் 23 ஏர்கன் ரக துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிகளுக்கு உரிய எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. மூவரிடமும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டுக் கழகத்தில் தாங்கள் இந்த துப்பாக்கிகள் குறித்து பதிவு செய்திருப்பதாகவும், அதற்காகவே கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஏர்கன் துப்பாக்கிகள் இந்திய துப்பாக்கி சுடும் கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று 2 நாட்களாக அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். ஆனால், ஏர்கன் துப்பாக்கிகள் பதிவு செய்யப்படவில்லை என நேற்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த ஏர்கன் துப்பாக்கிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.18 லட்சம். விற்பனைக்காக துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு எதற்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து மூவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கியுள்ள மூவரில் சிராஜம் முனீர், முகமது ஹயூம் இருவரும் அண்ணன், தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : airport ,Dubai ,Ilangudi Airport , abducted , Dubai , Madurai, 23 Airgun rifles
× RELATED துபாயில் இருந்து திருச்சிக்கு பயணி கடத்திய ஒரு கிலோ தங்கம் பறிமுதல்