×

வாணியம்பாடியில் பரபரப்பு சம்பவம் ஆண் குழந்தையை 1 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய் கைது: வாங்கிய பெங்களூரு தம்பதியும் சிக்கினர்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் ஆண் குழந்தையை பெற்ற தாயே 1 லட்சத்திற்கு பெங்களூரு தம்பதிக்கு விற்றுள்ளார். இதுபற்றி கணவர் கொடுத்த புகாரின்பேரில் குழந்தையின் தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சத்யா(29). இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து குடும்ப பிரச்னை காரணமாக கணவர்களை பிரிந்து விட்டார். இதையடுத்து 3வதாக முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், சத்யாவுக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முருகன் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த மாதம் தர்மபுரியில் மீண்டும் சிகிச்சைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் குழந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மனைவி சத்யாவிடம் கேட்டபோது குழந்தையை காணவில்லை என மழுப்பலாக பதில் கூறியுள்ளார். கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் குழந்தையை முருகன் தேடிவந்தார். எங்கும் கிடைக்காததால் மனைவியின் மீது சந்தேகமடைந்த முருகன், இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சத்யாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், தான் பெற்ற குழந்தையை பணத்திற்கு ஆசைப்பட்டு விற்றதை ஒப்புக்கொண்டார். அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற இடைத்தரகர் மூலம், பெங்களூரு ஜெய் நகரை சேர்ந்த செருப்பு வியாபாரி ரஹமத்- ஷகினா தம்பதிக்கு 1 லட்சத்துக்கு குழந்தையை விற்றது தெரிந்தது. இதற்கு முன்பணமாக 65 ஆயிரம் பெற்றுள்ளார். மேலும், குழந்தையை விற்பதற்கு சத்யாவின் அக்கா கீதாவும் உடந்தையாக இருந்தாராம். இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் பெங்களூரு விரைந்து, ஜெயநகர் பகுதியில் இருந்து ரஹமத்(35) அவரது மனைவி ஷகினா(28) ஆகியோரிடம் இருந்த முருகனின் குழந்தையை நேற்று அதிகாலை மீட்டனர். பின்னர், அவர்கள் இருவரையும் கைது செய்து வாணியம்பாடி அழைத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையின் தாய் சத்யா, உடந்தையாக இருந்த பெரியம்மா கீதா(35) மற்றும் இடைத்தரகர் கவிதா(30) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், வாணியம்பாடி பகுதியில் வேறு குழந்தைகள் காணாமல் போனதற்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : WANNAIAMPADI ,Bangalore ,baby boy ,Soldier ,incident , Vaniyambady ,sensational,male, mother rrested
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...