×

சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட தாதா மணிகண்டன் உடலை வாங்க மனைவி மறுப்பு: குயிலாப்பாளையத்தில் கடைகள் அடைப்பு

வானூர்: சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட தாதா மணிகண்டன் உடலை வாங்க மனைவி மறுத்தார். இதனிடையே அவரது சொந்த ஊரான குயிலாப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இளம்வயதில் வழிப்பறி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்துவது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். நாளடைவில் தாதாவாக வலம் வந்ததால் இவர் தாதா மணிகண்டன் என்று ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்பட்டார். மேலும் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்தார். இவர் மீது விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காவல்நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று முன்தினம் சென்னை அண்ணாநகரில் ஆரோவில் போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

இதையடுத்து அவரது சொந்த ஊரான குயிலாப்பாளையம் கிராமத்தில் பதற்றத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் கிராமத்தில் அசம்பாவிதம் நடக்காத வகையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நேற்று கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டது. இதையடுத்து  தாதா மணிகண்டனுக்கு ரமணி, ராணி என்ற இரண்டு சகோதரிகளும், 3 சகோதரர்களும் இருந்தனர். இதில் சகோதரர் ஆறுமுகம் திண்டிவனம் அருகே தழுதாளியில் கொலை செய்யப்பட்டார். மற்றொரு சகோதரர் ஏழுமலை கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இறந்தார். அண்ணன் முருகவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது தாதா மணிகண்டன் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், மணிகண்டனின் உடலை வாங்க அவரது மனைவி ஆனந்தி மறுத்துள்ளார். அவர் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் குயிலாப்பாளையத்தில் உள்ள மணிகண்டனின் பெரியப்பா மகள் மஞ்சுளா மற்றும் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை வாங்க வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : encounter ,closures ,Dada Manikandan ,Chennai Dada Manikandan: Shop , Killed ,encounter , Chennai,buy,body
× RELATED என்கவுன்ட்டரில் காயமடைந்த உதவி...