×

கண்டலேறு அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீர் திறப்பு: தொடர்ந்து நீர் வழங்கப்படும் என ஆந்திர அதிகாரி தகவல்

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 1.4 டிஎம்சி தண்ணீர் முதல்கட்டமாக நேற்று திறந்து விடப்பட்டது. நீரின் வரத்தை  பொறுத்து தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என என ஆந்திர முதன்மை  பொறியாளர் தெரிவித்தார்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என  மொத்தம் 15 டி.எம்.சி  தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை தாக்கம் காரணமாக ஆந்திராவில் பரவலாக மழை பெய்தது.இந்த மழை காரணமாக ஆந்திர அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை  நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். ஆந்திர அரசு தண்ணீர் திறந்துவிட சம்மதித்தது.

இந்நிலையில் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம், கண்டலேறு அணையிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டம் முதன்மை பொறியாளர் முரளிநாத்ரெட்டி, சென்னை மெட்ரோ குடிநீர் வடிகால் வாரிய முதன்மை  பொறியாளர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து இரண்டு மதகுகள் வழியாக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டனர். பின்னர், படிப்படியாக உயர்த்தி 1,500 கன அடி தண்ணீராக  திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, ஆந்திர மாநில முதன்மை பொறியாளர் முரளிநாத் ரெட்டி கூறுகையில், சோமசீலா அணையில் தற்போது 65 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அங்கிருந்து கண்டலேறு அணைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வீதம் வந்து  கொண்டிருக்கிறது.
 தற்போது 13 டிஎம்சி தண்ணீர், கண்டலேறு அணையில் உள்ள நிலையில் சென்னை குடிநீர் தேவைக்காக 1.5 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும், கண்டலேறு அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, சென்னைக்கு கூடுதல் தண்ணீர்  திறந்து விடப்படும் என்றார்.அப்போது  , சென்னை மெட்ரோ குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.        



Tags : Tmc ,Kandharalu Dam ,water opening ,Continental Dam 1.5 ,AP , continental dam, water, supplied
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.62 அடியாக குறைவு..!!