×

தமிழக - கேரள நதிநீர் பிரச்னை பினராயுடன் எடப்பாடி பேச்சு: இரு மாநில தலைமை செயலர்கள் தலைமையில் உயர் குழு அமைப்பு

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உட்பட தமிழக, கேரளா இடையேயான நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண இரு மாநில தலைமை செயலாளர்கள் தலைமையில் குழு அமைப்பது என்று  திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த முதல்வர்கள் சந்திப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தமிழகம் - கேரளா இடையே பல ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உள்பட நதி நீர் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக பலமுறை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை  அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை.இந்நிலையில் நதிநீர் பிரச்னைகளில் தீர்வு காண, இரு மாநில முதல்வர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த கேரளாவுக்கு, தமிழகம் கோரிக்கை விடுத்தது. இதை கேரள அரசு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இரு மாநில முதல்வர்களுக்கு  இடையே பேச்சுவார்த்தை நேற்று மாலை திருவனந்தபுரத்தில் சுற்றுலாத்துறையின் ‘மஸ்கட்’’ ஓட்டலில் நடந்தது.இதில் தமிழக அரசு தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் ஷண்முகம், முதல்வரின் முதன்மை செயலாளர் சாய்குமார், கேரளா  தரப்பில் முதல்வர் பினராய் விஜயன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, வனத்துறை அமைச்சர் ராஜூ, தலைமை செயலாளர் டோம் ஜோஸ் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 மாலை 3.10க்கு ெதாடங்கிய கூட்டம் 5 மணி வரைநீடித்தது.இதில் முல்லை பெரியாறு, நெய்யாறு, பரம்பிக்குளம்- ஆழியார் நதிநீர் ஒப்பந்தங்கள், பாண்டியாறு - புன்னப்புழா நீர்மின் திட்டம், ஆனமலையாறு சிறுவாணி உட்பட நதிநீர் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகம் - கேரளா இடையே நிலவும் நதிநீர் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக முதல்வருடன் வந்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தமிழக மற்றும் கேரள மக்கள்  சகோதரர்களாக எந்த வேறுபாடும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அதனால் தான் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவு செய்தோம்.

*பரம்பிக்குளம் - ஆழியாறு நதிநீர் ஒப்பந்தம் 60 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய இரு மாநிலமும் சேர்ந்து முடிவு எடுத்துள்ளது. அதற்காக இரு மாநில செயலாளர்கள் தலைமையில் ஒரு குழு  அமைக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 5 பேர் குழுவில் இடம் பெறுவார்கள்.  இதே குழுதான் ஆனமலையாறு,  மணக்கடவு பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தும்.
* முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சாரம்  வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இரு மாநில தலைமை செயலாளர்களும் 6  மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நதிநீர் பிரச்னை குறித்து  விவாதிப்பார்கள்.
 * பாண்டியார்-புன்னப்புழா நிர்மின் திட்டம் குறித்து விவாதிக்க தனி கமிட்டி அமைக்கப்படும். இந்த குழுவில் மின்வாரிய அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். நதி நீர் பங்கீடு குறித்து எந்த பிரச்னை என்றாலும் பேசி சுமூக தீர்வு காணப்படும்.   இதை ஒரு நல்ல தொடக்கமாக கருதுகிறேன். இவ்வாறு கேரள முதல்வர் கூறினார்.

‘சுமூகத் தீர்வு காணப்படும்’
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: நாங்கள் ஆலோசித்தபடி பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் தண்ணீரை பங்கிடுவது குறித்து இரு மாநிலத்திலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். பாண்டியார் - புன்னப்புழா, ஆனமலையாறு - சிறுவாணி உட்பட பிரச்னைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். முல்லை பெரியாறு பிரச்னையில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் உள்ள சில பிரச்னைகள் குறித்து  பேசவும் குழுக்கள் அமைக்கப்படும்.தற்போது நடந்துள்ள கூட்டம் முதல்கட்ட நடவடிக்கையாகும். பம்பை - அச்சன்கோயில் - நெய்யாறு உட்பட அனைத்து நதி நீர் பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். இரு மாநில மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சுமூக  முடிவு எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : talks ,Edappadi ,rivers ,Tamil Nadu ,Kerala ,High Team ,state secretaries , Tamil Nadu - Kerala, river water ,state ,helm
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...