×

அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம் குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள்? துண்டு விரித்து வலை வீசி வருகிறீர்களா?: போலீசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: சென்ைன பள்ளிக்கரணையில் இளம் பெண் சுபஸ்ரீ, அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் பலியான விவகாரத்தில் குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள். துண்டு விரித்து வலை வீசி தேடிவருகிறீர்களா என்று கேள்வி  எழுப்பியதுடன் இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது.சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12ம் தேதி இளம்பெண் சுபஸ்ரீ ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது அதிமுகவை சேர்ந்த ஜெயகோபால் வீட்டு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால்  வந்த தண்ணீர் லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இச்சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து பேனர் விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால  நிவாரணம் வழங்க வேண்டும். சட்ட விரோதமாக பேனர் வைக்க அனுமதி வழங்கிய மாநகராட்சி மற்றும் சுப மரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பரங்கிமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர், பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு  இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில்மூத்த வக்கீல் பி.வில்சன், வக்கீல் வி.கண்ணதாசன் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, பேனர்கள் வைக்கக்கூடாது என்று திமுக தலைவர் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை விடுத்துள்ளார். இதை  நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளோம்.

இளம்பெண்சுப இறந்து 13 நாட்கள் ஆகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். எனவே, நியாயமான விசாரணை நடத்தும் வகையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் ஆஜராகி உயர் நீதிமன்றம் பிறப்பித்த மூன்று உத்தரவுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. பேனர் வைக்க அனுமதி வழங்கியது தொடர்பாக சம்மந்தப்பட்ட மண்டல உதவி பொறியாளர் மற்றும்  உதவி செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.விரைவில் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். சுபயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரண நிதி ரூ. 5 லட்சம் தரப்பட்டுள்ளது என்றார்.  அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமிலியாஸ் ஆஜராகி பரங்கிமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அழகு சார்பாக அறிக்கை தாக்கல் செய்தார். அவரிடம் நீதிபதிகள், ஆளும்கட்சி சார்பில் பேனர் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா. அதை யாராவது தாக்கல் செய்தார்களா. தண்ணீர் லாரி ஓட்டுநரை மட்டும் கைது செய்துள்ளீர்கள். அவர் முக்கிய குற்றவாளி இல்லையே. முக்கிய  குற்றவாளிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. பேனர் வைத்ததை பார்த்தும் நடவடிக்கை எடுக்காத சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்தீர்களா.

கூடுதல் அட்வகேட் ஜெனரல்: பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு மற்றும் பரங்கிமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீதிபதிகள்: சட்டம் எப்போதும் கீழ் நிலை அதிகாரிகள் மீது தான் பாயுமா? எப்போது முக்கிய குற்றவாளிகளை பிடிப்பீர்கள்? துண்டு விரித்து வலை வீசி தேடிவருகிறீர்களா? யார் தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்?.கூடுதல் அட்வகேட் ஜெனரல்:  குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.நீதிபதிகள்: பிரிவு மாற்றப்பட்டதை மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்தீர்களா?கூடுதல் அட்வகேட் ஜெனரல்: தாக்கல் செய்துள்ளோம். நீதிபதிகள்: குற்றவாளிகளை யார் கைது செய்வது? போலீஸ் கமிஷனர் இந்த நடவடிக்கையை கண்காணித்து வருகிறாரா? தண்ணீர் லாரி ஓட்டுநரால் இந்த விபத்து ஏற்படவில்லை. பேனர் விழுந்ததால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. பேனர்  வைத்த ஜெயகோபால், மேகநாதன் எங்கே இருக்கிறார்கள்? தவறு செய்த போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கூடுதல் அட்வகேட் ஜெனரல்: விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.நீதிபதிகள்: நீங்கள் மாற்றம் செய்த பிரிவு சீரியசானது. அதிகபட்ச தண்டனைக்கான பிரிவு. இந்த நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், அதை நீங்கள் அமல்படுத்தவில்லை. இதன் முடிவு உயிர் பலிதான். சட்ட விரோத பேனர்  தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தியதற்கான விபரங்கள் எங்கே? அரசு பிளீடர்: உயர் நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. (ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்)அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: அரசுத் தரப்பில் தாக்கல் செய்தது 2019 பிப்ரவரி 15 முதல் 2019 மே 15 வரையிலான நடவடிக்கை மட்டுமே.

 உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி, சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு செயலர்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால், அதை செயல்படுத்தவில்லை. இறுதியில் இதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அது சட்டங்களை கலைத்துவிடுவதுதான்.  அதுதான் வழி. நாங்கள் கருத்தும், ஆலோசனையும் மட்டுமே தர முடியும். நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது.
 எனவே, இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், சட்டம் ஒழுங்கு போலீஸ் கூடுதல் கமிஷனர், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆகியோர், ‘விதிமீறல் பேனர் மற்றும் விபத்து  குறித்த முழு விபரங்கள் அடங்கிய அறிக்கை குறித்து  அக்டோபர் 15ம் தேதிக்குள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Tags : banner fall ,perpetrators ,AIADMK ,Subasree ,victim ,Subhashree , Subhashree ,criminals?, Icort volley ,police
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...